search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோவாளையில் சமூக இடைவெளியுடன் பூ மார்க்கெட் செயல்பட்டதை காணலாம்
    X
    தோவாளையில் சமூக இடைவெளியுடன் பூ மார்க்கெட் செயல்பட்டதை காணலாம்

    தோவாளை பூ மார்க்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியது

    ஊரடங்கால் மூடப்பட்ட தோவாளை பூ மார்க்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியது. அதே சமயத்தில், சமூக இடைவெளியுடன் வியாபாரம் நடந்தது.
    ஆரல்வாய்மொழி:

    தோவாளையில் புகழ்பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், பிற மாவட்டங்கள், அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். தேவைக்கு ஏற்றாற் போல் பூக்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. கொரோனா ஊரடங்கால் பூ மார்க்கெட் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் மூடப்பட்டது. இதனால் பூ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்தனர். பூ கட்டும் தொழிலாளர்கள் வேலையை இழந்து பரிதவித்தனர்.

    இதற்கிடையே தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், பூ மார்க்கெட் செயல்பட தமிழக முதல்-அமைச்சரிடம் பேசி பூ வியாபாரம் செய்ய அனுமதி பெற்று தந்தார். கொரோனா தொற்று அச்சம் காரணமாக பூ மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய வியாபாரிகள் தயக்கம் காட்டினர். இருப்பினும் அவரவர் வீடுகளில் வைத்து சமூக இடைவெளியுடன் பூ வியாபாரம் செய்யப்பட்டது. ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்ட நிலையில் சமூக இடைவெளியுடன் மார்க்கெட்டில் வைத்து பூ வியாபாரம் செய்ய வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    பின்னர் நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் தோவாளை பூ மார்க்கெட்டுக்கு வந்து 3 முறை வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதாவது, சமூக இடைவெளியுடன் குறைந்த வியாபாரிகளை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து பூ மார்க்கெட்டுக்கு வெளியே வியாபாரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் போக, மார்க்கெட்டில் 30 கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது.

    பின்னர் மார்க்கெட் திறக்க வசதியாக தோவாளை பஞ்சாயத்து சார்பில் மார்க்கெட் முழுவதும் கிருமி நாசினி தெளித்து, ஒவ்வொரு பூக் கடையிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக கோடு போடப்பட்டது. இறுதியாக கலெக்டர் அனுமதி அளித்ததை தொடர்ந்து 2 மாதத்திற்கு பிறகு நேற்று தோவாளை பூ மார்க்கெட் திறக்கப்பட்டது. மார்க்கெட்டில் வியாபாரிகள் முக கவசம் அணிந்து பூக்களை விற்பனை செய்தனர். அதோடு மார்க்கெட்டுக்கு வெளியே கை கழுவ சோப்பும், தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தன. பூ மார்க்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பின்னர் பூ மார்க்கெட்டுக்கு வந்த மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணபாலன் சமூக இடைவெளியுடனும், விதிமுறையை கடைபிடித்தும் வியாபாரம் நடக்கிறதா? என ஆய்வு செய்தார். தொடர்ந்து பூ வியாபாரிகள் சங்கத்தினர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தை தோவாளையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூ மார்க்கெட் திறக்க நடவடிக்கை எடுத்ததற்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர்.

    நேற்று தான் கடை திறக்கப்பட்டதால், பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்திருந்தது. அதாவது, பிச்சி, முல்லை பூக்கள் கிலோ ரூ.250-க்கு விற்பனையானது. இனி வருங்காலங்களில் பூக்களின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். பொதுவாக பூ மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 1½ டன் பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால் நேற்று 3 டன் வந்ததாக பூ வியாபாரி மதுகிருஷ்ணன் தெரிவித்தார்

    மற்ற பூக்களின் விலை (கிலோ) வருமாறு:-

    அரளி ரூ.50, மல்லி ரூ.80, சம்பங்கி ரூ.30, கனகாம்பரம் ரூ.300, கோழிப்பூ ரூ.30, வாடா மல்லி ரூ.30, பச்சை ரூ.6, ரோஸ் பாக்கெட் ரூ.10, பட்டன் ரோஸ் ரூ.70, ஸ்டம்பு ரோஸ் ரூ.200, கிரேந்தி மஞ்சள் ரூ.40, சிவப்பு கிரேந்தி ரூ.40, சிவந்தி மஞ்சள் ரூ.80, வெள்ளை ரூ.100, கொழுந்து ரூ.60, மரிக்கொழுந்து ரூ.80 என விற்பனையானது. 
    Next Story
    ×