search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் தேக்கமடைந்துள்ள சரக்குகள்
    X
    திருப்பூர் ரெயில் நிலையத்தில் தேக்கமடைந்துள்ள சரக்குகள்

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் 65 டன் சரக்குகள் தேக்கம்

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் 65 டன் சரக்குகள் தேக்கமடைந்துள்ளது. கூடுதல் பெட்டிகளில் அனுப்பி வைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
    திருப்பூர்:

    கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு தொடர்கிறது. உணவுப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்கும் வகையில் ரெயிலில் சரக்குகள் அனுப்பி வைக்கும் சேவை தொடர்கிறது. திருப்பூரில் அதிக அளவில் முககவசம் தயாரிக்கப்பட்டு ரெயில் மூலமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கும், கேரள மாநிலம் சொரனூருக்கும் இடையே ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த ரெயில்களில் தினமும் சென்னை, கேரளாவுக்கு முககவசம் உள்ளிட்ட பொருட்களை திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

    கடந்த 6 நாட்களாக திருப்பூர் ரெயில்நிலையத்தில் இருந்து ரெயில்களில் சரக்குகளை அனுப்பி வைக்க முடியவில்லை. மற்ற பகுதிகளில் இருந்து அதிக அளவில் சரக்குகளை ரெயிலில் ஏற்றி விடுவதாலும் திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் ரெயில் வந்து சென்றதாலும் சரக்குகளை மற்ற ரெயிலில் ஏற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 65 டன் சரக்குகள் ரெயில் நிலையத்தில் தேக்கம் அடைந்துள்ளது.

    சரக்கு பண்டல்கள் ரெயில் நிலைய நடைமேடை பகுதிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 23 டன் சரக்குகள் இருந்தால் ஈரோட்டில் இருந்து ஒரு பெட்டியை தனியாக ஒதுக்கீடு செய்து சரக்குகளை அனுப்பி வைக்க முடியும். தற்போது 65 டன்னுக்கும் மேல் சரக்குகள் இருப்பதால் 4 பெட்டிகளை தனியாக ஒதுக்கீடு செய்ய அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் ரெயில் நிலைய துணை மேலாளர் (வணிகம்) முத்துக்குமார் கூறும்போது, 65 டன் சரக்குகளை அனுப்பி வைக்கும் வகையில் ஈரோட்டில் இருந்து 4 பெட்டிகள் திருப்பூருக்கு தனியாக கேட்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை பெட்டிகள் வந்ததும் சரக்குகள் அனுப்பி வைக்கப்படும் என்றார். 
    Next Story
    ×