search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் திட்டப்பணிகளுக்கான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசிய போது எடுத்த படம்.
    X
    குடிநீர் திட்டப்பணிகளுக்கான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசிய போது எடுத்த படம்.

    ராசிபுரத்திற்கு ரூ.800 கோடியில் குடிநீர் திட்டப்பணி ஆய்வறிக்கை தயார் - அமைச்சர் தங்கமணி

    ராசிபுரத்திற்கு ரூ.800 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகளுக்கான ஆய்வறிக்கை தயாராக உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாரதா, துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித்துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களிடம் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.

    அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

    விதிமீறி போடப்பட்டு உள்ள குடிநீர் இணைப்புகளை அகற்ற உடனடியாக நோட்டீஸ் கொடுக்க அறிவுறுத்தி உள்ளோம். எங்காவது ஆற்றில் இருந்து தண்ணீர் வருவதில் குழாய்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், லாரிகள் மூலம் குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் தற்போது கொரோனா இல்லாத மாவட்டமாக உள்ளது. மாவட்டத்தில் இருந்த 22 கட்டுப்பாட்டு மண்டலங்களில் 21 நீக்கப்பட்டுள்ளது. பி.சி.ஆர். பரிசோதனைக்காக மாதிரிகளை சேலம், சென்னை, கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. தற்போது முதல்-அமைச்சர் அனுமதி அளித்துள்ளதால் நாமக்கல் மாவட்டத்திலேயே பி.சி.ஆர். பரிசோதனை தொடங்கி உள்ளது. தினந்தோறும் 200 பேர் பரிசோதனை செய்துகொள்ள முடியும்.

    ராசிபுரத்திற்கு ரூ.800 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகளுக்கான ஆய்வறிக்கை தயாராக உள்ளது. விரைவில் முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று அந்த பணிகள் தொடங்கப்படும். அதேபோல் குமாரபாளையம், திருச்செங்கோடு தொகுதிகளுக்கான ரூ.400 கோடி மதிப்பிலான பணி இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கிறோம். திருச்செங்கோடு நகராட்சிக்கு ரூ.87 கோடி மதிப்பீட்டில் நடந்துவரும் பணியும், நாமக்கல் நகராட்சிக்கு ரூ.200 கோடி மதிப்பில் நடந்து வரும் பணியும் இன்னும் 3 மாதத்தில் முடிந்துவிடும். தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு மின்சார திட்டத்தையும் ஏற்கமாட்டோம் என்றும், எந்த காரணத்தை கொண்டும் இலவச மின்சார திட்டத்தை ரத்துசெய்ய மாட்டோம் எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். எந்த இடையூறு வந்தாலும், முதல்-அமைச்சர் தமிழக மக்களுக்கு துணை நின்று இலவச மின்சாரத்தை வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×