search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வல்லம் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு - பணியாளர்களை முற்றுகையிட்டு போராட்டம்

    வல்லம் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் பணியாளர்களை முற்றுகையிட்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வல்லம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தெற்கு ஒன்றியம் புதுக்குடி ஊராட்சியில் கடந்த 3 வருடங்களாக டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்துள்ளது. தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட எல்லையில், உள்ள இக்கடையால் இப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. எனவே, இந்தக்கடையை மூட வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடையை கடந்த 7-ம் தேதி முதல் முறையாக திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அப்போது ஏற்பட்ட போராட்டத்தையடுத்து மதுபான கடை திறக்கப்படாமல் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை புதுக்குடியில் உள்ள மதுகடையை மீண்டும் திறக்க இருப்பதாக அறிந்த விவசாயிகள், பொது மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், மாதர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்தனர். மதுக்கடையை திறக்க வந்த பணியாளர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து அதிகாரிகள், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்தினர். போராட்டக்காரர்கள் மதுக்கடையை திறக்க கூடாது என உறுதியாக தெரிவித்ததால் மதுக்கடை திறக்கப்படவில்லை. தொடர்ந்து 2-வது முறையாக இப்பகுதியில் உள்ள கடையை திறக்க விடாமல் பொது மக்கள் போராட்டம் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×