search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வெளி மாநிலங்களுக்கு சென்று திரும்பும் வாகனங்களில் பயணிகளை ஏற்றி வரக்கூடாது- கலெக்டர் எச்சரிக்கை

    வெளி மாநிலங்களுக்கு சென்று திரும்பும் வாகனங்களில் பயணிகளை ஏற்றி வரக்கூடாது என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க போர்க்கால அடிப்படையில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தொழில் நிமித்தமாக தமிழகத்திற்கு வந்து பல்வேறு மாவட்டங்களில் தங்கி பல்வேறு தொழிற் சாலைகளிலும், சாலையோர வியாபாரிகளாகவும், கட்டடத் தொழிலாளர்களாகவும் தங்கி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாணவர்களாகவும் பலர் தங்கியுள்ளனர்.

    ஊரடங்கு உத்தரவினால் வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலையில் அவர்கள் விரும்பினால் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது.

    இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம், நிலைப்பேருந்து உரிமையாளர்கள் சங்கம், மினி பேருந்து, மேக்ஸி கேப், சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களுடன் திண்டுக்கல் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு பயணிகளை ஏற்றிச் சென்று அனுமதி பெற்ற மாநிலத்தில் இறக்கி விட்டு திரும்பும்போது கண்டிப்பாக எந்த ஒரு நபரையும் ஏற்றாமல் வாகனம் திரும்பி வர வேண்டும். அவ்வாறு இல்லாமல் வெளி மாநிலத்தில் இருந்தோ அல்லது வரும் வழியில் முறையான அனுமதியின்றி ஆட்களை ஏற்றி வருவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் அதில் பயணம் செய்த பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் விஜய லட்சுமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×