search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகை பூ
    X
    மல்லிகை பூ

    திண்டுக்கல்லில் தற்காலிக பூ மார்க்கெட் திறப்பு

    திண்டுக்கல்லில் 2 மாதங்களுக்கு பிறகு தற்காலிக பூ மார்க்கெட் இன்று திறக்கப்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் அருகில் உள்ள வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, நிலக்கோட்டை, ஆத்தூர், சித்தையன்கோட்டை, வடமதுரை, அய்யலூர் உள்ளிட் பல்வேறு கிராமங்களில் விளைவிக்கப்படும் மலர்கள் இங்கு விவசாயிகளால் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இங்கிருந்து சில்லரை வியாபாரிகளும் வெளியூர் வியாபாரிகளும் அதிக அளவில் வந்து பூக்களை வாங்கி செல்வது வழக்கம். இதனால் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்படும் பூ மார்க்கெட் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

    மேலும் இங்கு மாலைகள் தயாரித்தும், வெளியூர்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வந்தனர். தினசரி சுமார் 10 முதல் 30 டன் வரை பூக்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும். பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் வரத்து அதிகரித்து விற்பனையும் கூடும்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 26-ந் தேதி முதல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த பூ மார்க்கெட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த பூக்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தனர். சந்தை இல்லாததால் தோட்டத்தில் இருந்த பூக்களை கால்நடைகளை மேயவிட்டு அழித்தனர்.

    பல லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு கண்ணீர் வடித்து வந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் தற்காலிக பூ மார்க்கெட் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் பூ மார்க்கெட் செயல்பாட்டுக்கு வந்தது.

    இது குறித்து விவசாயிகளுக்கு ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    127 கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் இன்று 40 கடைகள் மட்டும் செயல்பாட்டுக்கு வந்தது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மார்க்கெட் செயல்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். பூக்களை வாங்குவதற்கும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்ததால் களைகட்டியது.

    மல்லிகை கிலோ ரூ.350, முல்லை ரூ.200, கனகாம்பரம் ரூ.250, சம்பங்கி ரூ.100, அரளி ரூ.120, ரோஜா ரூ.60 என விற்பனையானது.
    Next Story
    ×