search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.எஸ்.பாரதி
    X
    ஆர்.எஸ்.பாரதி

    என்னை கொரோனா பரிசோதனைக்கு அனுப்புங்கள்- நீதிபதியிடம் ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி, தன்னை கொரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
    சென்னை:

    திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இன்று திடீரென கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டிற்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்பின்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் வீட்டிற்கு அழைத்துச் சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

    அப்போது, தனக்கு சளி மற்றும் இருமல் இருப்பதால் கொரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி கேட்டுக்கொண்டார். தனது மகன் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    முன்னதாக ஆர்.எஸ். பாரதியிடம் காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடத்தியபோது, ஆணையர் அலுவலகத்துக்குள் செல்ல திமுக வழக்கறிஞர்கள் முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன், திமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்தனர்.
    Next Story
    ×