search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தொண்டியில் போதை பொருட்களுடன் 9 பேர் கைது

    தொண்டியில் போதை பொருட்களுடன் 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு அடிக்கடி போதை பொருட்கள், தங்கம், பீடி இலைகள் போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் நடவடிக்கையின் பேரில் கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் தொண்டி அருகே உள்ள வீரசங்கிலி மடம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    இதனை பதுக்கி வைத்திருப்பவர்களை பிடிக்க டி.எஸ்.பி. புகழேந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி திருவாடானையில் பதுங்கி இருந்த அப்துல்வகாப், முத்துராஜா, அஜ்மீர்கான், அபுல்கலாம் ஆசாத், சுரேஷ்குமார், அப்துல்ரகீம், அஜ்மல்கான், அருள்தாஸ், கேசவன் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்றவழக்குகள் உள்ளன.

    9 பேரிடமும் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி அவர்களிடமிருந்த ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹெராயின், தங்க பிஸ்கட், 21 செல் போன்கள், ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இந்த கும்பல் இங்கிருந்து இலங்கைக்கு போதை பொருட்களை கடத்தி வந்துள்ளனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வந்ததும், இதனை தொண்டியில் படகு மூலம் இலங்கைக்கு கடத்தி, அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான கும்பல், வட மாநிலங்களில் முக்கிய போதை கடத்தல் காரர்களுடன் தொடர்பில் இருந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் செம்மரம், ஹெராயின், தங்க பிஸ்கட் கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி 9 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த கடத்தலுக்கு மூளையாக யார் செயல்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் பலருக்கு இந்த கடத்தலில் தொடர்பு உள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×