search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திண்டுக்கல் அருகே கொரோனா ஊரடங்கால் நலிவடைந்த பட்டறை தொழில்

    கொரோனா ஊரடங்கால் நலிவடைந்த பட்டறை தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆத்தூர்:

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு நிதி நிறுவனங்கள் உள்பட குடிசை தொழில் வரை பாகுபாடின்றி அனைத்தையும் கொரோனா வைரஸ் முடக்கி போட்டுள்ளது. அரசு சார்பில் பல்வேறு சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் பெரும்பாலான தொழிலாளர்கள் அதை பெற முடியாத நிலையில் உள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் பூ வியாபாரத்துக்கு அடுத்த படியாக பாத்திரம் தயாரிக்கும் தொழில் அதிகம் நடைபெறுகிறது. செம்பு, சில்வர் பாத்திரங்கள் செய்யும் பட்டறைகள் அதிக அளவில் உள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலை நம்பியே உள்ளன.

    கொரோனா ஊரடங்கால் தற்போது இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து கண்ணன் என்ற தொழிலாளி கூறும்போது, கடந்த ஆண்டு இந்த சமயத்தில் திருமணங்கள், வளைகாப்பு, சீர்வரிசைகளுக்கென்று அதிக அளவு பாத்திரங்கள் தயார் செய்து கொடுத்தோம். எங்களுக்கு மொத்த வியாபாரிகள் மூலப்பொருட்களை கொடுத்து விடுவார்கள்.

    கடந்த காலத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்த்தோம். ஒருநாள் கூலி ரூ.500 வரை கொடுப்பார்கள். தற்போது காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை தான் வேலை பார்க்க முடிகிறது. குறைந்தக் கூலியே கிடைக்கிறது. எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றவே சிரமப்பட்டு வருகிறோம். அரசு எங்கள் நலனில் அக்கறைக் கொண்டு வாழ்வாதாரத்தை காப்பாற்றும் என்று நம்பிக் கொண்டு இருக்கிறோம். இங்கு தயாரிக்கப்படும் பாத்திரங்கள் திண்டுக்கல், மதுரை, சேலம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் செல்லும். என்னைப் போன்று அரசின் நிவாரண உதவிக்காக ஏராளமான தொழிலாளர்கள் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×