search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி (கோப்புப்படம்)
    X
    வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி (கோப்புப்படம்)

    வனப்பகுதியில் வனவிலங்குகள் தாகம் தணிக்க 9 இடங்களில் தண்ணீர் தொட்டி

    திருவண்ணாமலை வனப்பகுதியில் வனவிலங்குகள் தாகம் தணிக்க 9 இடங்களில் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வனப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட மான்கள், குரங்குகள், காட்டு பன்றிகள் உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளது.

    தற்போது கோடைகாலம் என்பதாலும், அக்னி நட்சத்திரம் வருகிற 28ந்தேதி வரை இருப்பதாலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு தண்ணீரின்றி இருக்கின்றன.

    இந்த கோடையிலும் 2 முறை மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணிநேரம் மட்டுமே பெய்ததால் குட்டைகளில் தேங்கிய தண்ணீர் அக்னி வெயிலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் வறண்டு விட்டன.

    வனப்பகுதியில் மான்கள் கூட்டமாக வசிக்கின்றன. அவைகள் புல் மற்றும் இலைகளை தின்று பசியாறுகின்றன.

    தற்போது வனப்பகுதியில் தண்ணீர் தட்டுபாடு நிலவுவதால் மான்கள் வனத்தின் எல்லைப்பகுதியான சாலையோரங்களுக்கு வருகின்றன.

    காலை, மாலை நேரத்தில் அதிக அளவில் மான்கள் சாலையோரம் திரிகின்றன. அவ்வாறு வரும் மான்கள் தாகம் தணிக்கும் வகையில் வனப்பகுதியில் 9 இடங்களில் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

    அதில் டிராக்டர் மூலம் தினமும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.அதில் மான்கள் தண்ணீர் குடித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன.

    ஆனால் சில மான்கள் சாலைக்கே வந்துவிடுகின்றன. அவைகளை நாய்கள் துரத்தி கடிப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

    மேலும் சாலையோர வேலி சில இடங்களில் இல்லாததால் மான்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. வனவிலங்கு பாதுகாப்புக்காக வனத்துறையினர் 3 குழுக்களாக காலையும், மாலையும் ரோந்து சென்று வருகின்றனர். இருந்தபோதிலும் சில இடங்களில் வனவிலங்குகளை வேட்டையாடுதல் தொடர்கிறது. அதில் ஈடுபடும் சமூக விரோத கும்பலை பிடிக்க வேண்டும் என்பது வன ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×