search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளாடிச்சிவிளையில் தடைகள் அகற்றப்பட்ட போது எடுத்தபடம்.
    X
    வெள்ளாடிச்சிவிளையில் தடைகள் அகற்றப்பட்ட போது எடுத்தபடம்.

    குமரி மாவட்டத்தில் வெள்ளாடிச்சிவிளை உள்பட 5 இடங்களில் தடைகள் அகற்றம்

    குமரி மாவட்டத்தில் வெள்ளாடிச்சிவிளை உள்பட 5 இடங்களில் தடைகள் அகற்றப்பட்டன. அந்த பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதிகளாக இருந்தன. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் தற்போது 11 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.

    இந்தநிலையில் நாகர்கோவிலில் முதன்முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளாடிச்சிவிளையும் ஒன்று. இந்த பகுதிக்குள் யாரும் செல்லவோ, அப்பகுதியில் இருந்து யாரும் வெளியே வரவோ முடியாதபடி தடை விதிக்கப்பட்டு, பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள 156 குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இருந்து வந்தனர். மேலும் இந்த பகுதியில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர்களும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    அவர்களில் கடைசியாக வீடு திரும்பியவர் இப்பகுதிக்கு வந்து 14 நாட்கள் ஆனது. இந்த நாட்களில் அப்பகுதியில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படாததால் அப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டு இருந்த தடையை அகற்றுமாறு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று வெள்ளாடிச்சிவிளை பகுதியில் ஏற்படுத்தப்பட்டு இருந்த தடை மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டது.

    அப்போது மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்சால், மருத்துவ அதிகாரி உமாராணி, சுகாதார ஆய்வாளர் மகாதேவன்பிள்ளை, கோட்டார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சென்று தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்த தடுப்புகளை அகற்றினர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவரின் வீட்டில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளையும் கிழித்தனர்.

    அப்போது அப்பகுதி மக்கள், தடை காலங்களில் தங்களுக்கு தேவையான உணவு பொருட்கள், மருத்துவ வசதிகள், பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுத்த மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரையும் கைதட்டி வரவேற்று, சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

    இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டு இருந்த தடை 49 நாட்களுக்குப்பிறகு அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் மணிக்கட்டிப்பொட்டல் அனந்தசாமிபுரம் பகுதியில் ஏற்படுத்தப்பட்டு இருந்த தடையும் 49 நாட்களுக்குப்பிறகு அகற்றப்பட்டது.

    மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அதைத்தொடர்ந்து 11 நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் விரிகோட்டிலும் தடைகள் அகற்றப்பட்டன. உண்ணாமலைக்கடை பேரூராட்சி செயல் அலுவலர் பிரதாபன், சுகாதார அதிகாரி மேஷாக், மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கவேல் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் தடுப்பு வேலிகளை அகற்றினார்கள்.

    மேலும் நேற்று முன்தினம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பினர். அவர்கள் வீடு அமைந்துள்ள பகுதிகளான சுங்கான்கடை, கல்லுக்கூட்டம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த தடைகளும் அகற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த பகுதிகளில் குணமடைந்து திரும்பியவர்களின் வீடுகள் மட்டுமே மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்தவரும் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். ஆனால் அவருடைய வீடு அமைந்துள்ள பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடை இன்னும் அகற்றப்படவில்லை. கலெக்டர் உத்தரவிட்டதும் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய நபர்களில் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால் அப்பகுதி முழுமையாக சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்படும். தொற்று ஏற்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பினாலும், அவர் வீட்டுக்கு வந்தபிறகு 14 நாட்களுக்கு யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தால்தான் அப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட தடை நீக்கப்படும். ஆனால் தற்போது மத்திய, மாநில அரசுகள் இந்த விதிமுறைகளை மாற்றி இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பியதும் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள தடையை உடனடியாக அகற்றிவிட்டு, சம்பந்தப்பட்ட நபரின் வீட்டை மட்டும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படிதான் நேற்று முன்தினம் குணமடைந்து வீடு திரும்பிய 4 பேர் வசிக்கும் பகுதிகளில் உள்ள தடைகள் அகற்றப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


    Next Story
    ×