search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் பூமார்க்கெட் அருகே, சாலையோரத்தில் பூக்கள் விற்பனை செய்யப்பட்ட காட்சி.
    X
    திண்டுக்கல் பூமார்க்கெட் அருகே, சாலையோரத்தில் பூக்கள் விற்பனை செய்யப்பட்ட காட்சி.

    திண்டுக்கல்லில் சாலையோரத்தில் பூக்கள் விற்பனை

    ஊரடங்கால் மார்க்கெட் மூடிக்கிடப்பதால் திண்டுக்கல்லில் சாலையோரத்தில் பூக்கள் விற்கப்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் பூ மார்க்கெட் செயல்படுகிறது. திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்படும் பூக்கள், இங்கு விற்பனை செய்யப்படும். தினமும் 10 டன்களுக்கு மேல் பூக்கள் விற்பனை ஆகும். மேலும் ஓணம் பண்டிகையின் போது கேரளாவுக்கு தினமும் 5 டன் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும். இதனால் பூக்களுக்கு ஓரளவு விலை கிடைக்கும்.

    எனவே, பூ சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டன. அந்த வகையில் திண்டுக்கல் பூ மார்க்கெட் கடந்த 1½ மாதத்துக்கும் மேலாக மூடி கிடக்கிறது.

    இதனால் பூக்கள் விற்பனை முற்றிலும் தடைப்பட்டது. இதன் காரணமாக பூக்களை பறித்து கால்நடைகளுக்கு தீவனமாக போடும் நிலை ஏற்பட்டது. ஊரடங்கால் விவசாயிகள் மற்றும் பூ வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து பூ விற்பனைக்கு அனுமதிக்கும்படி வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் பூ மார்க்கெட் அருகே சாலையோரத்தில் பூக்களை வைத்து வியாபாரிகள் விற்பனையை தொடங்கினர். மேலும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து 1½ மாதங்களுக்கு பின்னர் பூக்கள் விற்பனை தொடங்கியதால், மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அதேநேரம் கோவில்கள் திறக்கப்படவில்லை என்பதால் பூக்கள் விற்பனை குறைந்து, விலையும் குறைவாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


    Next Story
    ×