search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டதை படத்தில் காணலாம்.
    X
    வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டதை படத்தில் காணலாம்.

    இ-பாஸ் பெறுவதில் தளர்வு - நெல்லையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு

    மாவட்டத்துக்குள் செல்ல இ-பாஸ் பெறுவதில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதால் நெல்லை மாவட்டத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது.
    நெல்லை:

    கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4-வது கட்டமாக வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்ட ஊரடங்கின் போது இருந்த கடுமையான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. மளிகை, காய்கறி கடைகள் செயல்படும் நேரம் அதிகரிப்பு, மதுக்கடைகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உள்மாவட்டத்துக்குள் செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறுவதில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    இதனால் நெல்லையில் வாகன போக்குவரத்து அதிகரித்தது. வழக்கம்போல், கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள், வேன், லாரிகள் என அனைத்து வாகனங்களும் சாலையில் அங்குமிங்கும் சென்றன. முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுதவிர ஆஸ்பத்திரிகள், கடைகளுக்கு நேற்று ஏராளமானோர் கார்களில் வந்தனர். அவர்கள் தங்களது கார்களை ஆஸ்பத்திரி, கடைகள் முன்பு நிறுத்தி இருந்ததால் அவை சாலையோரங்களில் அணிவகுத்து நின்றன.

    நெல்லை மாவட்ட எல்லையான வசவப்பபுரம், மாறாந்தை உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அங்குமிங்கும் செல்ல போலீசார் பெருமளவு நெருக்கடி கொடுக்கவில்லை. அதே நேரத்தில், கங்கைகொண்டான், காவல்கிணறு சோதனைச்சாவடிகளில் சென்னை, மும்பையில் இருந்து யாரும் வருகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக தொடர்ந்து சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×