search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முடிதிருத்தம்
    X
    முடிதிருத்தம்

    மதுரை புறநகர் பகுதிகளில் சலூன் கடைகளில் கூட்டம்

    மதுரை புறநகர் பகுதிகளில் சுமார் 56 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் இன்று திறக்கப்பட்டது. பல்வேறு கிராமங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் அனைத்து சலூன் கடைகளும் மூடப்பட்டன.

    4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் சில கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தளர்த்திய நிலையிலும் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் சவரத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். பொதுமக்களும் முடி திருத்தம் செய்ய முடியாமல் வீடுகளில் முடங்கினர். வீட்டில் பெண்கள், குழந்தைகளுக்கும் ஆண்களுக்கும் முடிகளை வெட்டி விடும் பழக்கம் நடைபெற்றது.

    இதுபோன்ற காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவலாக பரவி வந்தது. இந்த நிலையில் இன்று முதல் கிராமப் பகுதிகளில் உள்ள சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இதனால் சுமார் 56 நாட்களுக்கு பிறகு மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் இன்று காலை 6 மணி முதல் திறக்கப்பட்டது. கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டதுடன் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர்களும் வழங்கப்பட்டன.

    நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் சலூன் கடைகளில் கூட்டம் காணப்பட்டது. முடி திருத்தம் செய்ய வருபவர்கள் முகக்கவசம் அணிந்தபடி முடி வெட்டினர். சவர தொழிலாளர்களும் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து முடி திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை சலூன் கடைகள் அனைத்தும் அரசு அறிவித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின் கடை திறந்ததால் ஏராளமானோர் கடைகளுக்கு வந்து சமூக இடைவெளியை பின்பற்றி முடி வெட்டிக் கொண்டனர்.

    தற்போது ரம்ஜான் பண்டிகை நெருங்கி விட்டதால் முஸ்லிம் பகுதிகளில் உள்ள ஏராளமானோர் முடிகளை வெட்ட முடியாமல் தவித்து வந்தனர். இன்று காலை முதல் பல்வேறு கிராமங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சலூன் தொழிலாளர்கள் முக கவசம் அணிந்து கையுறை அணிந்து தொழிலில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×