search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    வாணாபுரத்தில் சூறை காற்றுடன் இரவில் மழை- 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

    திருவண்ணாமலை மற்றும் வாணாபுரத்தில் சூறைக்காற்றுடன் இரவில் பலத்த மழை பெய்தது. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு அக்னி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகலில் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன.இதைத் தொடர்ந்து சிறிது நேரம் மழை பெய்தது.

    பின்னர் இரவு 8.45 மணி அளவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது.

    சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்து ஓய்ந்ததும் மின்இணைப்பு கொடுக்கப்பட்டது. இரவில் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர் .

    மழையுடன் புயல் வந்துவிட்டதோ? என்று கூறுமளவிற்கு காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. மழை நின்றதும் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. பல இடங்களில் பேனர் மற்றும் மேற்கூரைகள் சரிந்து விழுந்தன.

    இதனால் அனைத்து பகுதிகளிலும் போர்க்களம் போல் காட்சி அளித்தன. சாலைகள் முழுவதும் மரக்கிளைகள் முறிந்து கிடந்தன.

    இந்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்காற்று வீசி வருகிறது.

    இதேபோல் தண்டராம்பட்டு, வாணாபுரம் பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது வாணாபுரம் அடுத்த வாழவச்சனூர், சதா குப்பம், அகரம்பள்ளிபட்டு, அந்தோணியார்புரம், உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரை மற்றும் ஓடுகள் காற்றில் பறந்தன.

    மேலும் மின்சார கம்பிகள் மீது ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த எள்ளு, 200 ஏக்கரில் கரும்பு, வாழை மாமரம், பனைமரங்கள் சாய்ந்து விழுந்தன.

    வாழவச்சனூர் சிவன்கோவில் அருகில் இருந்த 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் இரண்டாக பிளந்து சிவன் கோவில் மீது விழுந்தது. இதில் சிவலிங்கம் சேதமடைந்தது.

    சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. வீட்டின் கூரை காற்றில் அடித்து செல்லப்பட்டதால் தொழிலாளர்கள் வீட்டில் தங்க வழி இன்றியும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரவு முழுவதும் மழையில் நனைந்தபடி தவித்தனர்.

    வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று காலை சேதமடைந்த வீடுகள் மற்றும் பொருட்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×