search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    வேகமாக பைக் ஓட்டியதை கண்டித்ததால் போலீஸ் நண்பர் குழு வாலிபர் குத்திக்கொலை

    வத்தலக்குண்டுவில் குடிபோதையில் வேகமாக பைக்கில் வந்ததை கண்டித்ததால் போலீஸ் நண்பர் குழுவை சேர்ந்த வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்டார்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு காமராஜர்புரம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்த முத்துச்சாமி மகன் நவீந்திரன் (வயது23). இவர் போலீஸ் நண்பர்கள் குழுவில் உள்ளார். தற்போது கொரோனா தடுப்பு பணியில் தன்னார்வலராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று மாலை தனது நண்பர்களுடன் காமராஜர்புரம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த இப்ராகிம் மகன் சேக்முகமது (21) மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார்.

    இதை பார்த்த போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த விஜய் என்பவர் பொதுமக்கள் நடந்து வரும் பாதையில் ஏன்? இத்தனை வேகத்தில் வருகிறாய் என சத்தம் போட்டுள்ளார்.

    அப்போது போதையில் இருந்த சேக்முகமது அவரை தாக்க முயன்றார். இதை பார்த்த நவீந்திரன் தகராறை விலக்கி விட்டு சேக் முகமதுவை கண்டித்துள்ளார்.

    அதன்பிறகு வீட்டிற்கு சென்ற சேக்முகமது மீண்டும் திரும்பி வந்து அங்கே நவீந்திரனிடம் தகராறு செய்தார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.

    இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நவீந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நவீந்திரனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். கொலையாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போலீசார் தேடி வருவதை அறிந்ததும் சேக்முகமது சரண் அடைந்தார். அவரை கைது செய்து விட்டதாக பொதுமக்களிடம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    சேக்முகமது மீது மதுரையில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 6 மாதமாக வத்தலக்குண்டு புதுப்பட்டியில் தங்கி இருந்த அவர் போதை மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் அதனால்தான் இந்த கொலை நடந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர். வத்தலக்குண்டு அருகே கடந்த 2 நாட்களாக அடுத்தடுத்து கொலை சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×