search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்
    X
    சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்

    சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் ஜாமீன் மனு தள்ளுபடி- மேலும் 2 வழக்குகளில் கைது

    கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர், மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை:

    கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பியதாக, சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 6ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

    சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை 6 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும்படி, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனை 4 நாட்களாக உயர்நீதிமன்றம் குறைத்தது. மேலும், போலீஸ் காவல் முடிவடைந்ததும் திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனு மீது விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியது.

    அதன்படி திருத்தணிகாசலத்தின் விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில், அவரது ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, அவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக திருத்தணிகாசலம் பயன்படுத்தியதாக காவல்துறை தெரிவித்தது. அவர் மருத்துவத் துறையில் எந்த பட்டமும் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

    மருத்துவத் துறையில் பட்டம் பெற்றதாக கூறியதில்லை என்றும், பாரம்பரிய முறையில் பயிற்சி பெற்றதன் அடிப்படையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் திருத்தணிகாசலம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் திருத்தணிகாசலம் தரப்பு வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்ததுடன், அவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தார். திருத்தணிகாசலம் எந்த மருத்துவ தகுதியும் பெறாமல் தனது வைத்திய முறைகள் பற்றி சிகிச்சை அளித்துள்ளார், அவருக்கு ஜாமீன் வழங்கினால் அவரைப் போன்ற மனநிலை கொண்டவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    இதற்கிடையே சிறையில் உள்ள திருத்தணிகாசலம், மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் மக்களை ஏமாற்றியதாக தற்போது 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார். 
    Next Story
    ×