search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீரில் மூழ்கிய படகு.
    X
    தண்ணீரில் மூழ்கிய படகு.

    ராமேசுவரத்தில் சூறாவளியுடன் மழை: 30 படகுகள் சேதம்

    ராமேசுவரத்நில் நேற்று நள்ளிரவில் வீசிய சூறாவளி காற்றால் 30-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தன. படகில் தவறி விழுந்து மீனவர் பலியானார்.

    ராமேசுவரம்:

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு “உம்பன்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களுக்கு இடையே நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர் களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சி மடம், மண்டபம் ஆகிய இடங்களில் பெரும்பாலான நாட்டுப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை. படகுகள் அனைத்தும் கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    நேற்று நள்ளிரவு ராமேசுவரம், பாம்பன், தங்கச்சி மடம் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது இடிமின்னலுடன் மழையும் பெய்தது. கடுமையான வேகத்தில் வீசிய சூறாவளி காற்றினால் இந்த பகுதிகளில் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகளின் நங்கூர கயிறு அறுந்து படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி கடும் சேதத்துக்கு உள்ளாகின.

    இதன் காரணமாக ராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன், மண்டபம் ஆகிய துறைமுக பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தன. உம்பன் புயல் எதிரொலியாக ராமேசுவரத்தில் இந்த சூறாவளி காற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் ராமேசுவரம் தீவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

    இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளையை சேர்ந்தவர் தங்கமுனீஸ் (வயது25) மீனவரான இவருக்கு திருமணமாகவில்லை. நேற்று நள்ளிரவு வீசிய சூறாவளி காற்று காரணமாக இவர், தனது படகை கரையில் நிறுத்தி நங்கூர மிடும் பணியில் ஈடுபட்டு இருந்தார். எதிர்பாராத விதமாக தங்கமுனீஸ், படகுக்குள்ளேயே தவறி விழுந்தார்.

    இதில் நெஞ்சு பகுதியில் பலத்த அடிபட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மரைன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மீனவர் தங்கமுனீஸ் இறந்த சம்பவம் நம்புதாளை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×