search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தொற்று பாதிப்பு
    X
    கொரோனா தொற்று பாதிப்பு

    திண்டுக்கல்லில் முதல் முறையாக கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு

    திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக கர்ப்பிணி உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் 96 பேர் குணமடைந்தனர். கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பி வந்தவர்கள், வெளிமாநிலத்தில் இருந்து திரும்பி வந்தோர் ஆகியோரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் நேற்று வந்த நிலையில் 40 வயதான கர்ப்பிணி உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டத்திலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் கர்ப்பிணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல்லில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதவியாளராக பணியாற்றி வருகிறார். நீண்ட நாட்களுக்கு பின் கர்ப்பம் தரித்த ஆசிரியை கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் நிலக்கோட்டை அருகில் உள்ள கோடாங்கி நாயக்கன் பட்டியை சேர்ந்த 50 வயது கூலித்தொழிலாளிக்கும், குஜிலியம்பாறை அருகில் உள்ள சூலப்புரத்தை சேர்ந்த 50வயது கூலித்தொழிலாளி என மொத்தம் ஒரே நாளில் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் இவர்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. இதில் 17 பேர் மட்டும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பணி யாற்றிய உதவியாளரின் கர்ப்பிணி மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

    பணியாளர்கள் திங்கட்கிழமை அலுவலக பணிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×