search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னையில் இருந்து மது வாங்க செல்பவர்களை தடுக்க தீவிர கண்காணிப்பு - எல்லைகளில் வாகன சோதனை

    சென்னையில் இருந்து அருகில் இருக்கும் மாவட்டங்களுக்கு மது வாங்க செல்பவர்களை தடுக்க எல்லையோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதையடுத்து மதுக்கடைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்ததை அடுத்து டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை-திருவள்ளூரில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களான காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 27 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் 500 பேருக்கு மட்டுமே டோக்கன் முறையில் தினமும் மது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் சென்னையில் இருந்து மது வாங்குவதற்காக பலர் காஞ்சீபுரம், செங்கல்பட்டுக்கு படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தடுக்க எல்லையோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த இரண்டு மாவட்ட எல்லைகளிலும் காலையில் இருந்தே வாகன சோதனை நடைபெற்று வருகிறது. உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    குறிப்பாக இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்று மதுபாட்டில்களை வாங்கி வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவரை பிடித்து சோதனை செய்து வருகிறார்கள்.

    சென்னையில் எல்லையோர பகுதியில் நடைபெறும் இந்த சோதனையை பிற்பகலுக்கு பிறகு மேலும் தீவிரமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் சோதனையை மீறி காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சென்று திருட்டுத்தனமாக மது வாங்கி வருபவர்களை பிடிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடந்த முறை டாஸ்மாக்கடை திறக்கப்பட்டபோது சென்னையில் இருந்து பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று பலர் மது பாட்டில்களை வாங்கி வந்து பிடிபட்டனர். இதையடுத்து எல்லையோர பகுதிகளில் போலீசார் வாகன சோதனையை தீவிரமாக்கி உள்ளனர்.

    இதற்காக செங்கல்பட்டு, காஞ்சீபுரம் போலீசாருடன் இணைந்து சென்னை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×