search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் பாலத்தின் பணிகளுக்காக கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள உபகரணங்கள்
    X
    ரெயில் பாலத்தின் பணிகளுக்காக கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள உபகரணங்கள்

    பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் மீண்டும் தொடக்கம்

    கட்டுமான பணிகளுக்கான தடை தளர்த்தப்பட்டு உள்ளதால் பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் பணிகளை இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் தீவையும் பாம்பன் நிலப்பகுதியையும் இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. 105 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலமாக இது உள்ளது. எனவே பாம்பன் கடலில் இந்த பாலத்துக்கு அருகில் புதிதாக ரெயில் பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அதற்காக ரூ.250 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான முதல் தூண் அமைக்கும் பணியானது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தான் தொடங்கியது. அதை தொடர்ந்து ரெயில் பாலத்தின் நுழைவு பகுதியில் உள்ள கடற்கரையிலும், கடலிலும் தூண்கள் அமைப்பதற்காக அதிநவீன எந்திரங்களின் மூலம் பணிகள் நடந்தன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பாம்பன் பகுதியில் நடந்து வந்த புதிய ரெயில் பால பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

    இந்தநிலையில் கட்டுமான பணிகளுக்கான தடை தளர்த்தப்பட்டு உள்ளதால் பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் பணிகளை இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பாம்பன் கடலில் 2 ஆண்டுகளுக்குள் புதிய ரெயில்வே பாலத்தின் கட்டுமான பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஒன்றரை மாதமாக பணிகள் தடைபட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் இந்த பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக புதிய ரெயில் பாலத்தின் பணிகளை முழுமையாக முடிப்பதற்கு கால தாமதம் ஆகும். அதாவது 2 ஆண்டுகளில் முடிக்க இருந்த இந்த பணிகள் 3 ஆண்டுகள் வரை ஆகலாம். அதாவது, 2023-ம் ஆண்டில் தான் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×