search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடையில் விற்பனைக்கு குவிந்த மல்லிகைப்பூக்கள்
    X
    கடையில் விற்பனைக்கு குவிந்த மல்லிகைப்பூக்கள்

    நெல்லையில் பூக்களின் விலை வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை

    கொரோனா ஊரடங்கால் நெல்லையில் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    நெல்லை:

    கொரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 11-ந் தேதி முதல் டீக்கடைகள், பூக்கடைகள், ஜெராக்ஸ் கடைகள், பழுது பார்க்கும் கடைகள் உள்பட பல கடைகள் திறக்கப்பட்டன. முகூர்த்த நாட்கள், கோவில் விழாக்களில் பூக்கள் அதிக அளவு விற்பனையாகும். கொரோனா ஊரடங்கால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பூக்களின் விற்பனை குறைந்துள்ளது. மேலும் பூக்கள் வாங்க பொதுமக்கள் வராததால், விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் பூ மார்க்கெட் உள்ளது. அங்கு மொத்த விற்பனை கடைகள் உள்ளன. உள்ளூரில் இருந்து உற்பத்தியாகும் பூக்கள், கெட்வெல் ஆஞ்சநேயர் கோவில் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு இருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். எப்போது பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் அந்த மார்க்கெட் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதுகுறித்து மொத்த மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறுகையில், “அதிக அளவில் மல்லிகை பூ விற்பனையாகும். ஒரு கிலோ 200 ரூபாய் முதல் 300 வரை விற்பனையாகும். ஆனால் தற்போது 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. சம்பங்கி பூ 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகும். தற்போது 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதுபோல் அனைத்து பூக்களின் விலையும் வீழ்ச்சி அடைந்து விட்டது. இந்த பூக்களை கூட வாங்குவதற்கு ஆள் இல்லை. சில நேரங்களில் பூக்களை குப்பையில் கொட்டும் சூழ்நிலை ஏற்படுகிறது” என்றார்.

    நெல்லையை அடுத்த பல்லிக்கோட்டையை சேர்ந்த பூ விவசாயி மாரிமுத்து கூறுகையில், “நான் பல்லிக்கோட்டை பகுதியில் பூ பயிரிடுகிறேன். மானூர், பள்ளமடை, குப்பனாபுரம், அலவந்தான்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பூக்கள் பயிரிடப்படுகின்றன. பொதுவாக மல்லிகை பூ பங்குனி, சித்திரை மாதங்களில் அதிக அளவு உற்பத்தியாகும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டன. இதனால் உற்பத்தி செய்த பூக்களை விற்பனை செய்ய முடியவில்லை. பூக்களை பஸ்கள், ஆட்டோக்களிலும் கொண்டு வர முடியாத சூழ்நிலை ஆகிவிட்டது. இதனால் எங்களை போன்றவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மிகவும் வேதனையில் உள்ளோம். அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறை மூலம் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

    Next Story
    ×