search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணி
    X
    தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணி

    மராட்டிய மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 47 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

    மராட்டியம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 47 பேர் கொரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
    திருவாரூர்:

    மராட்டியம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 47 பேர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 29 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் 3 பேர் மட்டுமே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில்் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலர் வெளி மாநிலங்களில் தங்கி வேலை பார்த்து வந்தனர். அவர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாத நிலை இருந்து வந்தது. இதனையடுத்து அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மராட்டியம் மாநிலத்தில் இருந்து 21 பேரும், மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து 26 பேரும் என மொத்தம் 47 பேர் திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்றுமுன்தினம் வந்து அடைந்தனர்.

    இதனையடுத்து அவர்கள் 47 பேரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
    Next Story
    ×