search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் தலைக்குப்புற கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
    X
    கார் தலைக்குப்புற கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    மதுபோதையில் வாலிபர் ஓட்டிச்சென்ற கார் கவிழ்ந்தது

    மதுபோதையில் வாலிபர் ஓட்டி சென்ற கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    பேரூர்:

    கோவையில் டாஸ்மாக் கடை திறந்த முதல் நாளிலேயே நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

    கோவை மாவட்டத்தில் நேற்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தொண்டாமுத்தூர் உள்பட பல பகுதிகளில் மதுபாட்டில்களை அதிக எண்ணிக்கையில் வாங்கியவர்கள் அதனை கைகளிலும், பைகளிலும், ஹெல்மெட்டுகளின் உள்பகுதிகளில் வைத்தும் கொண்டு சென்றனர். பார்கள் செயல்பட அனுமதி இல்லாததால் பலர் ஒதுக்குப்புறமான மைதானங்களில் மதுபாட்டில்களை திறந்து மதுகுடித்தனர். குடிபோதையில் வாகனங்களில் சென்ற பலரும் விபத்தில் சிக்கினர்.

    கோவையை அடுத்த தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(வயது27). சலூன்கடை ஊழியர். இவர் தனது நண்பர்களான ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த நித்தின்(20), பீட்டர்(20), வடவள்ளியை சேர்ந்த ஹரிகரன்(26) ஆகியோருடன் நரசீபுரம் அருகே ஒதுக்குபுறமான பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுவாங்க காரில் சென்றார். டாஸ்மாக் கடை வந்ததும், மதுபாட்டில்களை வாங்கி விட்டு வனப்பகுதியில் மது குடித்தனர். பின்னர் நண்பர்களை அவரவர் வீடுகளில் விடுவதற்காக ரஞ்சித்குமார் காரை ஓட்டிசென்றார். அனைவரும் போதையில் இருந்தனர். நரசீபுரத்தில் இருந்து வடவள்ளியை நோக்கி கார் சென்றது.

    தொண்டாமுத்தூர் அருகே உள்ள புதுப்பாளையம் பிரிவில் கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்தது. காருக்குள் 4 வாலிபர்களும் சிக்கி கூச்சல் போட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து காருக்குள் சிக்கியவர்களை மீட்டனர். 4 வாலிபர்களும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இதுபற்றிய தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். டாஸ்மாக் கடை திறந்த முதல்நாளிலேயே குடிபோதையால் வாலிபர்கள் சென்ற கார் விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுபோல், கோவை மாங்கரை பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் நேற்று ஏராளமானோர் மது வாங்கி சென்றனர். கேரளாவில் மதுக்கடைகள் திறக்கப்படாததால், அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆனைக்கட்டி வழியாக வந்து மாங்கரை டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இந்த நிலையில் 26 வயதான கேரள வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் சென்றபோது போதை காரணமாக கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபரது நண்பர்கள் காரில் வந்து அவரைஅழைத்து சென்றனர்.
    Next Story
    ×