search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
    X
    தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

    போருக்கு நடுவில் கேளிக்கையா? - டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை கைவிட பாஜக வேண்டுகோள்

    தமிழக அரசு மீண்டும் மதுக்கடைகளை திறக்கும் தனது அறிவிப்பை மறு சிந்தனை செய்து வாபஸ் பெற வேண்டுமென தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா ஊரடங்கிற்கு பிறகும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடலாம் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது கவலையையும் வேதனையையும் அளிக்கிறது. 

    நோய்த்தடுப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில், உடலையும் உள்ளத்தையும் பலவீனமாக்கும் ஒரு போதைக்கு மக்களை தள்ளுவது வேடிக்கையான வேதனை.

    டாஸ்மாக் கடை

    கடந்த 45 நாட்களாக கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் காவல்துறை போன்ற அனைத்து ஊழியர்களையும் ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்தும் செயல் இது என்றுதான் கருதவேண்டி இருக்கிறது. போருக்கு நடுவில் கேளிக்கை என்பது போரில் வெற்றியை தராது. மாறாக விபரீதமான விளைவுகளுக்கு நம்மை இட்டுச் செல்லும்.

    கோயில்களில் அன்னதானத்தை தொடர்ந்திருந்தால் வரவேற்று இருக்கலாம். தரிசனத்திற்கு தடை விதித்தபோது அன்னதானத்திற்கும் தடைவிதித்த அரசு இன்னும் அன்னதானத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் உடலையும் உள்ளத்தையும் கெடுக்கும் மதுவுக்கு அனுமதி அளித்திருக்கிறது. உணவா, மதுவா? என்ற கேள்விக்கு மது என பதில் அளித்திருக்கிறது தமிழக அரசு. 

    டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசு அதற்கு கூறியிருக்கும் காரணங்கள் வினோதமானவை. அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் தமிழகத்திலும் திறக்கப்படுகிறதாம். 

    கொரோனா தொற்று எதிர்காலத்தில் எத்தனையோ பொருளாதார மாற்றங்களை விளைவிக்கக்கூடியது. அதில் பல்வேறு நஷ்டங்கள் ஏற்படலாம். அவற்றைத்தாண்டி வெற்றி பெற எத்தனை திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமோ அத்தனையும் வகுக்கப்பட வேண்டும். அந்த வகையில் டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடிவிட்டு இப்போது முதலே மாற்று வருமானத்திற்கு வழி தேடலாம். டாஸ்மாக்கை மூட முன்வந்து, மாற்றுச் சிந்தனையை முன்னெடுக்க தமிழக அரசு முனையுமானால் தமிழக பாரதிய ஜனதா கட்சி, அரசுக்கு எல்லா வகையிலும் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் நல்கத் தயாராக இருக்கிறது.

    எனவே, தமிழக அரசு, மீண்டும் மதுக்கடைகளை திறக்கும் தனது அறிவிப்பை மறு சிந்தனை செய்து வாபஸ் பெற வேண்டும் என தமிழக தாய்மார்களின் சார்பிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் கோரிக்கை விடுக்கிறேன்.

    இவ்வாறு எல்.முருகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
    Next Story
    ×