search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    தமிழகத்தில் தொழிற்சாலைகள் இயங்க நடவடிக்கை - கலெக்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு

    தமிழகத்தில் உள்ள சிவப்பு, ஆரஞ்சு பகுதிகளை பச்சைப் பகுதியாக மாற்றி அங்கு படிப்படியாக தொழிற்சாலைகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்தும், பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலமாக நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்தக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தக் ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அரசு வெளியிடுகின்ற வழிகாட்டுதல்களை கலெக்டர்கள் தங்கள் பகுதிகளில் கடைப்பிடித்ததால் தமிழகத்தில், சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் இந்த தொற்று நோய் பரவுதல் கட்டுக்குள் இருக்கிறது. சென்னையில் குறுகலான தெருக்களில் அதிக மக்கள் வசிக்கும் நிலையில் நோய் எளிதில் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.

    அரசு அறிவிக்கிற வழிமுறைகளை பின்பற்றினால் நோய் பரவலை முழுமையாக தடுக்க முடியும். கிராமப்புற பகுதி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிக மக்கள் வசிக்கின்ற பகுதியான மாநகராட்சிகளில் தொற்று பரவுதல் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    அரசு அறிவித்த வழிகாட்டுதலின்படி கலெக்டர்கள் செயல்பட்டதால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி அனைவருக்கும் கிடைத்தது. அதற்கு அனைத்து கலெக்டர்களுக்கும் பாராட்டுகள். தமிழகத்தில் தினமும் 7 லட்சம் பேர் அம்மா உணவகத்தில் சாப்பிடுகின்றனர். தமிழகத்தில் உணவு இல்லை என்ற நிலை இல்லை.

    மே மாதத்திற்கான விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை அரசு வழங்க இருக்கிறது. பொருட்களை வழங்குகிறபோது, சமூக இடைவெளியை பின்பற்றி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பல்வேறு இடங்களில் ரேஷன் பொருட்களை வழங்கும்போது சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டமாக வாங்குகின்றனர். அது தவிர்க்கப்பட வேண்டும்.

    காய்கறிகள் வாங்கும்போதும், சந்தைகளுக்கு மக்கள் செல்கிறபோதும் சமூக இடைவெளி நடைமுறையை மக்கள் பின்பற்றும் சூழ்நிலையை கலெக்டர்கள் உருவாக்க வேண்டும்.

    வேளாண்மைக்கு முழு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வேளாண் பணிக்கு செல்கின்றவர்களை எந்த இடத்திலும் யாரும் தடுக்க வேண்டாம். விவசாயி உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்வதற்கு எவ்வித தடையும் செய்யக் கூடாது.

    விவசாயிகள் சம்பந்தப்பட்ட அரிசி ஆலை, எண்ணெய் மில், ஜவ்வரிசி ஆலை, முந்திரி பதப்படுத்தும் ஆலை இப்படி விவசாயத்தை சார்ந்த தொழில்கள் எவ்விதத்திலும் பாதிக்காமல் இயங்குவதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

    100 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிந்து அந்தப் பணியிலே தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.

    50 தொழிலாளர்கள் இருந்தால், ஒரே இடத்தில் வேலைக்கு வரலாம், 100 தொழிலாளர்கள் இருந்தால் இரண்டாகப் பிரிக்க வேண்டும். 55 வயதிற்கு மேலான தொழிலாளர்களை தவிர்க்க வேண்டும். அவரது குடும்பத்திலே தகுதியானவர்கள் இருந்தால் அவரை அந்த பணியில் அமர்த்தலாம்.

    கோடை காலமாக இருப்பதால் கிராமப்புறம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் மக்களுக்கு தடையில்லாமல் குடிதண்ணீர் கிடைக்கிறதா என்பதை கலெக்டர்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும்.

    மத்திய அரசால் சிவப்பு பகுதி, ஆரஞ்சு பகுதி, பச்சை பகுதி என்று மூன்றாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. எந்த மாவட்டத்தில் பச்சை பகுதி இருக்கிறதோ, அந்தப் பகுதியில் படிப்படியாக தொழில் தொடங்குவதற்கு அரசு உங்களுக்கு சரியான உத்தரவை வழங்கும்.

    அதை பின்பற்றி, நீங்கள் அந்த பச்சை பகுதியிலே தொழில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம். அனைத்து தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கலாம்.

    தேவையில்லாமல் அனாவசியமாக வெளியில் செல்கின்றவர்களை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும். பிற மாநிலங்களிலிருந்து நம் மாநிலத்திற்கு நோய் தொற்றுள்ளவர்கள் யாராவது நுழைந்து விட்டால் இங்கு எளிதாக நோய் பரவிவிடும். எனவே நமது எல்லைக்கு வருகிறவர்களை முழுமையாக பரிசோதனை செய்தே அனுமதிக்கவேண்டும்.

    சிவப்பு பகுதிகளை ஆரஞ்சு பகுதிகளாக மாற்ற வேண்டும். ஆரஞ்சு பகுதிகளை பச்சை பகுதிகளாக மாற்ற வேண்டும். அப்படி படிப்படியாக மாற்றினால்தான் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். அப்படி இயல்பு நிலைக்கு வந்தால்தான், தொழிற்சாலை இயங்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×