என் மலர்

  செய்திகள்

  காய்கறிகள்
  X
  காய்கறிகள்

  மதுரையில் மளிகை கடைகள், மார்க்கெட்டுகள் நாளை திறக்கப்படுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகவும் மேலும் சில நாட்கள் முழு ஊரடங்கு கடைப்பிடித்தால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மதுரையை மாற்றமுடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
  மதுரை:

  மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும், மாநகராட்சியும், காவல் துறையும் இணைந்து அரசுக்கு ஊரடங்கு தொடர்பான மேல் நடவடிக்கை குறித்து அறிக்கை அளித்துள்ளது.

  இதனிடையே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை உள்ளிட்டமாவட்ட கலெக்டர்களுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில் கலெக்டர்கள் மாவட்ட நிலவரம் குறித்தும் முழு ஊரடங்கால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர் .

  மதுரை உள்ளிட்ட 5 மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கை தொடர்வதா? அல்லது மத்திய அரசு வழிகாட்டுதல்படி ஊரடங்கின்போது கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளை வருகிற 3-ந் தேதி வரை கையாள்வதா? என்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. எனவே ஊரடங்கு தொடர்பாக அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை முழு ஊரடங்கு காலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகவும் இதனால் மேலும் சில நாட்கள் முழு ஊரடங்கு கடைப்பிடித்தால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மதுரையை மாற்றமுடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

  மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறிகள், மருந்து பொருட்கள் தடையின்றி கிடைக்க உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்பதும் தற்போதைய கோரிக்கையாக இருப்பதால் முழு ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்ற இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.

  ஒருவேளை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மளிகை கடைகள், காய்கறி மார்க்கெட்டுகள் இயங்க வாய்ப்பு இல்லை. எனவே சமூக இடைவெளியை கடைப்பிடித்து காய்கறி மார்க்கெட், மளிகை கடைகளை மதியம் வரை திறக்க அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

  இதனிடையே மதுரை மாட்டுத்தாவணியில் செயல்பட்டு வந்த சென்ட்ரல் மார்க்கெட் முழு ஊரடங்கு காலத்தில் நெரிசலை தவிர்க்கும் வகையில் மூடப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு இன்று முடிவடைந்த நிலையில் நாளை முதல் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டை தற்போதைய இடத்திலிருந்து மாற்றி மாட்டுத்தாவணி பஸ் நிலையம் மற்றும் அதன் அருகே உள்ள கனரக வாகன நிறுத்துமிடத்தில் செயல்பட அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். அங்கு சென்ட்ரல் மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும்பட்சத்தில் வியாபாரிகள் மட்டுமே காய்கறிகளை வாங்க அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்களுக்கு அங்கு சில்லறையாக காய்கறிகள் விற்பனை செய்ய கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 150 மொத்த காய்கறி கடைகள் மட்டுமே இயங்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வியாபார சங்க பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

  மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் செயல்படாவிட்டால் அனைத்து வியாபாரிகளும் பரவை மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் கூடும் நிலை உருவாகும். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்படுவதுடன், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டுவிடும். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டை நாளை முதல் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மதுரை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  மதுரை மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் மளிகை கடைகள், காய்கறிகள் மார்க்கெட்டுகள் திறக்க அனுமதிக்கப்படுமா? என்பது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது.
  Next Story
  ×