search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சென்னையில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்

    ஊரடங்கையும் மீறி மக்கள் நடமாட்டம் வெளியில் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு நாளும் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.
    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 673 பேருக்கு சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

    சென்னையில் கொரோனாவின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்கள் நடமாட்டம் ஊரடங்கையும் மீறி வெளியில் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு நாளும் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

    கடந்த 2 நாட்களாக நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று ஒரே நாளில் சுமார் 10 இடங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று காலை 2 காவலர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. காவல் நிலையத்தில் பணிபுரியும் எழுத்தர் ஒருவருக்கும், உளவுப்பிரிவு போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

    ஓமந்தூரார் அரசு மருத்துவமனை

    இதையடுத்து இருவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். உடனடியாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. போலீஸ் நிலையம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த மேலும் 2 போலீசாருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பெண் போலீஸ் ஆவார். இன்னொருவர் அங்கு பணிபுரியும் போலீஸ்காரர்.

    பெண் போலீஸ் உதவி கமி‌ஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து திருவல்லிக்கேணியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருவரும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    ஒரே காவல் நிலையத்தில் அடுத்தடுத்து ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது மற்ற போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உளவுப்பிரிவு போலீஸ்காரர் கொரோனா தொடர்பான தகவல்களை சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வந்தார். இதுபோன்ற களப்பணியில் ஈடுபட்டபோது தான் அவரை கொரோனா நோய் தாக்கி உள்ளது.

    கொரோனா தாக்குதலுக்குள்ளான போலீஸ் ஏட்டு ஒருவரின் மைத்துனருக்கு கொரோனா இருந்துள்ளது. அவர் மூலமாக ஏட்டுக்கு பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த இருவரின் மூலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசுக்கும் இன்னொரு காவலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் கொத்தமல்லி வியாபாரி, லாரி டிரைவர், சலூன் கடைக்காரர் ஆகியோருக்கு ஒரே நாளில் கொரோனா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதற்கு மறுநாள் சாலிகிராமத்தை சேர்ந்த பூ வியாபாரி ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதன் மூலம் 4 பேர் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டனர்.

    கொத்தமல்லி வியாபாரி மூலம் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று பரவியது.

    இந்த நிலையில் காய்கறி மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கும் புதிதாக நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை சாலி கிராமத்தை சேர்ந்த அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை வளசரவாக்கத்தில் உணவு டெலிவரி செய்யும் வாலிபர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பலியான தந்தை மூலமாக இவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

    கடந்த 25-ந்தேதி வரையில் ஆன்லைன் நிறுவனத்தில் இவர் பணியில் இருந்துள்ளார். அப்போது பலருக்கு உணவுகளை சப்ளை செய்துள்ளார். இவர் மூலமாக வேறு யாருக்கும் கொரோனா பரவி உள்ளதா? என்பது பற்றி சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருடன் பணிபுரிந்த மற்ற ஆன்லைன் ஊழியர்களுக்கும் அவர் உணவு சப்ளை செய்த வீடுகளில் உள்ள குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கர்ப்பிணி பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவரது கணவரான சினிமா டான்சர், 5 வயது மகன் மற்றும் பெற்றோர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    கர்ப்பிணி பெண் பாதிக்கப்பட்டுள்ள தெருவில் ஏற்கனவே வியாபாரி உள்பட 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்று பொருட்களை வாங்கி உள்ளார். அதன் மூலமே அவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

    வடபழனி கவரை தெருவைச் சேர்ந்த 49 வயது நபர் ஒருவர் சொந்தமாக கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த நபருக்கு கடந்த 19-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கட்டுமான அதிபருக்கும் கொரானோ தொற்று இருப்பது உறுதியானது.

    கட்டுமான அதிபரின் மொபட்டை தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் அடிக்கடி வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இதன்மூலம் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கோடம்பாக்கம் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர் கே.கே. நகர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த வாரம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பணிக்கு சென்றார். இதையடுத்து அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவரது ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் அவரது கணவர் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    மயிலாப்பூர் மீனாம்பாள் நகர் குடிசை பகுதியில் ஒரே தெருவில் கொரோனாவால் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 மாதம் மற்றும் 1 வயது குழந்தை உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணி புரிந்து வரும் டாக்டர் ஒருவரது மூலமாக இந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து மீனாம்பாள் நகர் குடிசை பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

    சென்னை சிந்தாதிரிப்பேட்டை என்.என்.காலனி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அதே குடியிருப்பில் வசித்து வந்த 65 வயது முதியவருக்கும், அவரது பேரனுக்கும் கொரோனா பரவியுள்ளது. இருவரும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×