search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளர்களுக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கியபோது எடுத்த படம்.
    X
    தொழிலாளர்களுக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கியபோது எடுத்த படம்.

    கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்

    கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி வழங்கினர்.
    கோவில்பட்டி:

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர். கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த செலவில், வாடகை கார் டிரைவர்கள், பந்தல் தொழிலாளர்கள் உள்ளிட்ட 100 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

    பின்னர் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரங்கா தீப்பெட்டி தொழிற்சாலை அதிபர் வரதராஜன் ஏற்பாட்டில், அங்கு பணியாற்றும் 465 தொழிலாளர்களுக்கு தலா 15 கிலோ அரிசி, காய்கறிகளை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் வழங்கினர்.

    பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கு உதவிடும் வகையில், ரங்கா தீப்பெட்டி தொழிற்சாலை அதிபர் வரதராஜன் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் வழங்கினார்.

    இதேபோன்று முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்காக ஸ்ரீராம் தீப்பெட்டி தொழிற்சாலை அதிபர் கோபால்சாமி ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் வழங்கினார். தங்களது ஒரு மாத ஓய்வூதியத்தை வழங்கும் வகையில், முன்னாள் ராணுவ வீரர்களான கோவிந்தராஜ் ரூ.30 ஆயிரமும், கொண்டல்ராஜ் ரூ.26,632-ம் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்காக அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் வழங்கினர்.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டதால், தமிழகத்தில் சமூக பரவலாக மாறவில்லை. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 27 பேரில் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். கடந்த வாரம் 19 பேரும், தற்போது 3 பேரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மற்றவர்களும் ஓரிரு நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார்கள்.

    ஊரடங்கால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். தீப்பெட்டி தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்று, 1,778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணியாற்றும் 21 ஆயிரத்து 770 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டு உள்ளார். இதற்காக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.

    சுகாதார துறை அறிக்கையின் அடிப்படையிலும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், தமிழக அரசு ஊரடங்கு தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில், வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களின் ரத்த மாதிரியை சேகரித்து பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

    கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, கோவில்பட்டி யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், துணை தலைவர் பழனிசாமி, தாசில்தார் மணிகண்டன், நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம், துணை தலைவர் கோபால்சாமி, தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க ஆலோசகர் திலகரத்தினம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க பொருளாளர் செல்வமோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×