search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    ஊரடங்கால் குடும்ப சண்டையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு

    ஊரடங்கால் குடும்பங்களில் ஏற்படும் சண்டையில் பாதிக்கப்படும் பெண்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உயிர் கொல்லி நோயான கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    அனைவரும் வீட்டிலேயே இருக்கவேண்டும், தனித்திருக்க வேண்டும், விழிப்பாய் இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கப்பட்டு, அதைத் தொடர்ந்து அரசுத் துறைகள் முழு வீச்சில் களப்பணியாற்றி வருகின்றன.

    வீட்டில் முடங்கி கிடக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் தன்னலம் பேணி, குடும்பத்தையும் காத்து, நாட்டை நலமாய் இருக்க உதவ வேண்டிய இந்த வேளையில், குடும்ப சண்டைகளும், பெண்களுக்கான வன்முறைகளும் ஆங்காங்கே நடப்பதாக செய்திகள் வருவது வருந்தத்தக்க போக்காகும்.

    தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை, குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு உடனடி தேவைகளான தொலைபேசி மூலம் ஆற்றுப்படுத்துதல், மருத்துவ உதவி, குறுகிய கால தங்கும் வசதி, உணவு போன்ற அத்தியாவசிய தேவை மற்றும் சட்டஉதவி ஆகியவற்றினை அந்தந்த மாவட்டநிர்வாகங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் பெண்கள், உடனடியாக பெண்கள் உதவி எண் 181, காவல்துறைஉதவி எண் 1091 மற்றும் 122 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

    உதவி எண்கள்


    இந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் பாதுகாப்பு அலுவலர்கள், குடும்பநல ஆலோசகர்கள் ஆகியோரால் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகநலத்துறை மூலம் செயல்படும் சேவை இல்லங்கள், ஒருங்கிணைந்த சேவை மையம், இடைக்கால தங்கும் இல்லங்கள், பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் ஸ்வதார் இல்லங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவதுடன், அவர்களுக்கு தேவையான மருத்துவஉதவி, இலவச சட்டஉதவி, மனநல ஆலோசனை ஆகியவை வழங்கப்படும்.

    குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை தங்கள் குழந்தைகளுடன் அங்கேயே தங்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பெண்களது கண்ணியம் மற்றும் பாதுகாப்பிற்கு தமிழ்நாடுஅரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் எனவும், குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தயங்காமல் பெண்கள் உதவி எண்கள்:181, 1091, 122, மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் அருகாமையில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களை உடனடியாக தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×