search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

    சென்னையில் நிலைமை சீரடையும் வரை ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள பகுதிகளில் ஒன்றாக சென்னையை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தியாவின் சுகாதார தலைநகராகவும், மருத்துவ சுற்றுலா மையமாகவும் அறியப்பட்ட சென்னை இப்போது கொரோனா ‘ஹாட் ஸ்பாட்’டாக மாறியிருப்பது வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் ஊரடங்கு உத்தரவை அனைத்துத்தரப்பினரும் மதித்து நடக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவந்தேன்.

    ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் ஊரடங்கை மதிக்காததன் விளைவாகத்தான் சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் அச்சப்படும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது தானாக வந்த பாதிப்பு அல்ல. மாறாக நாமாக தேடிக்கொண்ட துன்பம். வான்புகழ் கொண்ட தமிழகத்தின் தலைநகரத்துக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இதில் இருந்தும், கொரோனா பாதிப்பில் இருந்தும் மீண்டு வர நாம் செய்ய வேண்டியது ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்து, கொரோனா எதிர்ப்பு போரில் அரசுக்கு ஒத்துழைப்பது மட்டும் தான். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் அளிப்பது உள்ளிட்ட பணிகளை அரசு பார்த்துக்கொள்ளும் நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு பங்களிக்க வேண்டியது நமது கடமையாகும். அதை உணர்ந்து அடுத்து வரும் 4 நாட்களுக்கு மட்டுமின்றி சென்னையில் நிலைமை சீரடையும் வரை ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்க மக்கள் முன்வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×