search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுவாணி அணை
    X
    சிறுவாணி அணை

    சிறுவாணி அணையில் இருந்து ஜூன் மாதம் வரை தண்ணீர் எடுக்கலாம்- அதிகாரிகள் தகவல்

    சிறுவாணி அணையில் இருந்து ஜூன் இறுதி வரை நீர் எடுக்க முடியும் என மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கோவை:

    மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணை, கோவையின் முக்கிய நீராதாரமாக உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 863.40 மீட்டர் உயரத்தில் சிறுவாணி அணை அமைந்துள்ளது.

    அணையில் 50 அடி வரை நீர் தேக்கலாம். தற்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக 45 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக சிறுவாணி அணைப்பகுதியில் மழை இல்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவாணி அணையில் 12 மில்லி மீட்டர், அடிவாரப் பகுதியில் 27 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்து இருந்தது

    தற்போதைய நிலவரப்படி அணையில் 20அடி அளவுக்கு நீர்மட்டம் உள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையில் இருந்து 85 எம்.எல்.டி அளவுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டது. மேலும், சில நாட்களுக்கு சிறுவாணி அணைப்பகுதியில் மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போதைய நிலையில் வரும் ஜூன் இறுதி வரை சிறுவாணி அணையில் இருந்து நீர் எடுக்க முடியும் என மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அணையிலிருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு, கடந்தாண்டு, செப்.20ல் தண்ணீர் திறக்கப்பட்டு, சுற்றுக்கள் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக அணை நீர்ப்பிடிப்பு பகுதியான, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று விட்டது. மேலும் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

    கடந்த 3 மாதங்களாக 90 அடி உள்ள அணையின் நீர் மட்டம் 29.75 அடியாகவே உள்ளது. அமராவதி அணையை ஆதாரமாக கொண்டு தண்ணீர் பெற்று வந்த பல கிராமங்களில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளளது. இந்த ஆண்டு குளிர்கால மழையும், கோடை மழையும் போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்தே காணப்படுகிறது. இதனால் ஜூன் மாதம் தொடங்க உள்ள குறுவை சாகுபடியும் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

    அதிகாரிகள் கூறுகையில், ‘அணைக்கு, கோடை மழையால் ஓரளவு நீர்வரத்து இருக்கும். நடப்பாண்டு, மழையில்லாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை பெய்து நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே குடிநீருக்கு திறக்க முடியும்,’ என்றனர்.

    Next Story
    ×