search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி சாகுபடி
    X
    தக்காளி சாகுபடி

    திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி சாகுபடி தீவிரம்

    திருப்பூரில் தக்காளி சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் புதிதாக காய்கறிகளையும் ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை பராமரிப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தளி, மடத்துக்குளம் பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் தென்னை, வாழை, நெல், கரும்பு, சப்போட்டா, கொய்யா, மா உள்ளிட்ட நீண்டகால பயிர்களையும் கத்தரி, வெண்டை, அவரை, பீட்ரூட், தக்காளி, வெங்காயம், மிளகாய், பூசணி, அரசாணி உள்ளிட்ட காய்கறிகளையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    ஊரடங்கு அமலில் இருந்தாலும் விவசாயத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் சாகுபடி பணிகள் பரவலாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் புதிதாக காய்கறிகளையும் ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை பராமரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தளி அமராவதி சுற்றுவட்டார பகுதியில் தக்காளி சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்:-

    தக்காளி குறுகியகால பயிர், முறையான பராமரிப்பு இருந்தால் நடவு செய்த 60 நாட்களில் காய்ப்புக்கு வந்து விடும். ஒரு மாதம் முழுவிளைச்சலை அளிக்கும். நாற்றுப்பண்ணையில் இருந்து தக்காளி நாற்று ஒன்று 50 காசு வீதம் ஏக்கருக்கு 10 ஆயிரம் நாற்றுகளை விலைக்கு வாங்கி வந்து நடவு செய்கிறோம்.

    தற்போது உள்ள கோடை வெயிலின் தாக்கத்தால் நடவு செய்யப்பட்ட தக்காளி நாற்றுகள் காய்ந்து விடுவதால் மீண்டும் மறுநடவு செய்யவேண்டி உள்ளது. சொட்டுநீர் பாசனம் கைகொடுத்து உதவுவதால் சாகுபடி பணிகளில் தொடர்ந்து ஈடுபட முடிகிறது. ஊரடங்கின் காரணமாக தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஊரடங்கிற்கு பின்பு தக்காளி விலையேற்றத்தை சந்திக்கும் என்ற நம்பிக்கையில் நடவு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×