search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்
    X
    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்

    கரூரில் கொரோனாவில் இருந்து மீண்ட 48 பேர் வீடு திரும்பினர்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்த 48 பேர் கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.
    கரூர்:

    கரூர், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் பூரண குணமடைந்த 48 பேரை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், கரூர், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர்கள் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் முனியநாதன், கூடுதல் காவல்துறை இயக்குனர் (சிலை கடத்தல் தடுப்பு பிரிவு) அபய்குமார்சிங், மாவட்ட கலெக்டர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு, 48 பேருக்கும், பழக்கூடை கொடுத்து வாழ்்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். அப்போது டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் என அனைவரும் சமூக விலகலை கடைபிடித்து வரிசையாக நின்று குணமடைந்தவர்களை கை தட்டி வழியனுப்பி வைத்தனர். இதில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன், அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் ரோஸி வெண்ணிலா, கூடுதல் முதல்வர் தேரணிராஜன், திண்டுக்கல் அரசு மருத்துவமனை முதல்வர் விஜயகுமார் உள்ளிட்ட டாக்டர்கள், கரூர் வட்டாட்சியர் அமுதா உள்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக கலெக்டர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

    கரூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவர்களில் டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் பூரண குணமடைந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேரும் என மொத்தம் 48 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 76 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கரூரைச் சேர்ந்த 24 பேர், திண்டுக்கல்லை சேர்ந்த 33 பேர், நாமக்கல்லை சேர்ந்த 10 பேர் என மொத்தம் 67 பேர் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்கள். மீதமுள்ள 9 பேர் தொற்று அறிகுறி காரணமாக தீவிர கண்காணிப்பில் உள்ளவர்கள் ஆவர்.

    கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் பூரண குணமடைந்த 101 பேரும், தொற்று அறிகுறி காரணமாக அனுமதிக்கப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்புக்கு பின், ரத்தப்பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட 37 பேரும் இதுவரை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தூக்கம் இழந்து, இரவு பகலாக அர்ப்பணிப்பு உணர்வுடன், தங்களது உயிரையும் பணயம் வைத்து பணியாற்றி வரும் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் என அனைவருக்கும் இந்த வெற்றி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×