search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    கோடையில் குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை

    இந்த ஆண்டு கோடை காலத்தை சமாளிக்க போதுமான குடிநீர் இருப்பு உள்ளது. அதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று குடிநீர் கண்காணிப்பு பொறியாளர் கூறினார்.
    சென்னை:

    கொரோனா ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் இருந்தாலும் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது.

    சென்னை குடிநீர் வாரியம் 650 லாரிகள் மூலம் தினமும் 5 ஆயிரம் நடைகள் (டிரிப்ஸ்) தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    இதில் 1200 நடைகள் பணம் பெறப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. மீதமுள்ள 3800 லாரிகள் நடைகள் பொதுமக்களுக்கு இலவசமாக சப்ளை செய்யப்படுகிறது.

    ஊரடங்கு தடை காலத்திலும் பொதுமக்கள் சேவையில் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். குடிநீர் சுத்திகரிப்பு கழிவு நீர் சுத்திகரிப்பு, குடிநீர் விநியோகம், குடிநீர் நிரப்புதல், கழிவுநீர் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட பணிகளில் 400 அதிகாரிகள் 4800 ஊழியர்கள் என மொத்தம் 5200 பேர் தினமும் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என தினமும் சோதனை செய்யப்படுகிறது. முகக்கவசம் சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றி பாதுகாப்பான முறையில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தினமும் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை நகர மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    வீராணம் ஏரியிலிருந்து 180 மி.லி. கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் (நெமிலி, மீஞ்சூர்) 180 மி.லி. ஆழ்துளை கிணறுகள் மூலம் 40 மி.லி. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகள் மூலம் 250 மி.லி. குடிநீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்து விநியோகிக்கப்படுகிறது. அதுபோல கழிவுநீர் 550 மி.லி. சுத்தம் செய்யப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு மூன்றாம் நிலை சுத்திகரிப்பு செய்து 90 மி.லி. தண்ணீர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 460 மி.லி. கழிவுநீர் இரண்டாம் நிலை சுத்திகரிப்பு மூலம் நீர் நிலைகளில் விடப்படுகிறது.

    கிருஷ்ணா நதி நீர் இந்த ஆண்டு 7.5 டி.எம்.சி. கிடைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை பெறப்பட்டுள்ளது. இந்த அளவு கிருஷ்ணா நீர் கிடைத்திருப்பது இதுவரையில் இல்லாத புதிய பதிவாகும். மாதத்திற்கு 1 டி.எம்.சி. கிருஷ்ணா நதி நீர் கொடுக்கவேண்டும் என்ற உடன்பாடு இருந்தபோதிலும் இந்த ஆண்டுதான் அதிக அளவு தண்ணீர் தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கோடை காலத்தை சமாளிக்க போதுமான குடிநீர் இருப்பு உள்ளது. அதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை.

    தற்போதைய நிலவரப்படி 7 மாதத்திற்கு சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கக் கூடிய அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அதனால் கோடைகாலத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை. தற்போது பூண்டி ஏரியில் 1.4 டி.எம்.சி., செம்பரம்பாக்கம் ஏரி 1.6 டி.எம்.சி., புழல் ஏரி 2.9 டி.எம்.சி., வீராணம் ஏரி 1.6 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அதனால் கோடையில் குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை.

    இதுகுறித்து சென்னை குடிநீர் கண்காணிப்பு பொறியாளர் ராமசாமி கூறியதாவது:-

    சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய நீர் ஆதாரங்களில் தேவையான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. கோடைகாலத்தை சமாளிக்க இது போதுமானது. இந்த ஆண்டு மழையே இல்லை என்றாலும் கூட தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. இதற்கிடையில் தென்மேற்கு பருவ மழை மூலம் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலவரப்படி 7 மாதத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது. 7.5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஒரு மாதத்திற்கு 1 டி.எம்.சி. தண்ணீர் சென்னைக்கு தேவைப்படுகிறது. அதனால் தற்போதுள்ள இருப்பின் மூலம் தேவையான அளவு குடிநீரை சென்னை மக்களுக்கு விநியோகிக்க முடியும்.

    தற்போதுள்ள ஊரடங்கு தடை உத்தரவால் 7 சதவீதம் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதாலும், வெளியூருக்கு ஆட்கள் சென்றிருப்பதாலும் தேவை குறைந்துள்ளது. தினமும் வழக்கமாக 5500 லாரி நடைகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும். தற்போது 5200 லாரி நடைகள் சப்ளை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×