search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகே வாசன்
    X
    ஜிகே வாசன்

    முன்பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்- ஜி.கே.வாசன்

    ஊரடங்கால் ரெயில் சேவை ரத்தானதால் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு ரெயிலில் பயணம் செய்ய ஏற்கனவே முன்பதிவு செய்த ரெயில் பயணிகளுக்கு முன்பதிவு கட்டணத்தை பிடித்தம் செய்யாமல் முழுமையாக திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரணமாக ரெயிலில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்தவர்கள் பயணச்சீட்டை ரத்து செய்தால் முன்பதிவு கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படுவது வழக்கமானது.

    ஆனால் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு முடியும் வரையில் மே மாதம் 3-ந்தேதி வரை பயணிகள் ரெயில்கள், விரைவு ரெயில்கள் உள்ளிட்ட ரெயில் சேவைகளை ரெயில்வே துறை ரத்து செய்தது.

    அதே சமயம் ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் பயணச்சீட்டை ரத்து செய்ய வேண்டாம் என்றும் அதற்கான தொகையை ஜூலை 31-ந்தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. மேலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் பயணச்சீட்டை ரத்து செய்ய வேண்டாம் என்றும் அதற்குரிய கட்டணம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் ஏற்கனவே முன்பதிவு செய்த சுமார் 39 லட்சம் பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்படும் என்றும் ரெயில்வே அதிகாரி தெரிவித்தார். இந்நிலையில் முன்பதிவு செய்த பயணச் சீட்டுக்கு பிடித்தம் செய்யப்படுவதாக முன்பதிவு செய்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதாவது முன்பதிவு செய்த கட்டணத்தில் ரூ.15 முதல் ரூ. 30 வரையும் மற்றும் ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து பிடித்தம் செய்தது போக மீதியுள்ள தொகையை திருப்பி தருவதாகவும் தெரிவிக்கின்றனர். அதே போல படுக்கை வசதி கொண்ட பயணச்சீட்டுக்கு ரூ. 120, குளிர்சாதன வசதி கொண்ட பயணச்சீட்டுக்கு ரூ. 180 என பிடித்தம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது நியாயமில்லை. காரணம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில், ரெயில்வே துறை ரெயில் சேவையை ரத்து செய்துவிட்டு, முன்பதிவுக்கு பிடித்தம் செய்யப்படாது என்று தெரிவித்த நிலையில் முன்பதிவுக்கான முழு தொகையையும் திருப்பி கொடுக்க வேண்டும் என்பது தான் நியாயம். அதுவும் இப்போதைய அசாதாரண சூழலில் பொருளாதார சிரமத்தில் இருக்கின்ற பொது மக்களில் ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சாதாரண நாட்களில் முன்பதிவு ரத்து ஆகும் போது பிடித்தம் செய்வது நடைமுறையில் இருந்தாலும் இப்போதைக்கு அதனை தவிர்த்து ரெயில்வே துறை அறிவித்த படியே முன்பதிவு செய்த கட்டணம் முழுவதையும் உடனடியாக திருப்பி தர வேண்டும் என்பது தான் முன்பதிவு செய்த பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது. எனவே எதிர்பாராத இந்த ஊரடங்கு காலத்தில் ரெயில்களில் பயணம் செய்ய ஏற்கனவே முன்பதிவு செய்த ரெயில் பயணிகளுக்கு பிடித்தம் ஏதும் இன்றி முழு கட்டணத்தையும் திருப்பி வழங்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×