search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாதண்ணீர் அடுத்த மாதம் மீண்டும் திறப்பு

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாதண்ணீர் அடுத்த மாதம் மீண்டும் திறக்கப்படும் என்று குடிநீர் வாரிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் 25-ந்தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் 28-ந்தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. கண்டலேறு அணையில் இருந்து அதிகபட்சமாக 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு கடந்த வாரம் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. இதனால் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது.

    நேற்று முன்தினம் இரவு பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரத்து முழுவதுமாக நின்றது. இதனால் கால்வாய் வறண்டன.

    செப்டம்பர் 25-ந்தேதி முதல் இதுவரை 7½ டி.எம்.சி கிருஷ்ணாதண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்துள்ளது. பூண்டி ஏரியில் தற்போதைய நிலவரப்படி 1,117 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    இதற்கிடையே ஆந்திர விவசாயிகளின் 2-வது சாகுபடிக்காக கிருஷ்ணா தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

    இதுபற்றி குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆந்திர விவசாயிகளின் தேவைக்காக பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த (மே) மாதம் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும். கூடுதலாக 500 மில்லியன் கனஅடி வரைதண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

    கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் ஆந்திரா அரசு பூண்டி ஏரிக்கு தண்ணீர் வழங்க வேண்டும்.

    தற்போது கண்டலேறு அணையில் 23 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. எனவே இந்த ஆண்டு 2-வது கட்ட தவணையிலும் ஜூலை மாதம் முதல் மேலும் கிருஷ்ணா தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×