search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    ஊரடங்கையொட்டி தமிழகத்தில் எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் என்ன? பழனிசாமி தலைமையில் ஆலோசனை

    பிரதமர் அறிவித்துள்ள ஊரடங்கையொட்டி தமிழகத்தில் எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடந்தது.
    சென்னை:

    கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 14-ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கினை வருகிற 30-ந்தேதி வரையிலும் நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நாட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஊரடங்கினை மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிப்பதாகவும், 7 கட்டளைகளை பின்பற்றுமாறும் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஊரடங்கு அமலில் இருந்தாலும் வருகிற 20-ந்தேதி முதல் சில கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில், விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி, சிறு, குறு தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய பணிகளை தொடரலாம். சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான சில முக்கிய அறிவிப்புகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

    இந்த சூழ்நிலையில் ஊரடங்கு தொடர்பாக பிரதமர் மோடியின் அறிவிப்பு மற்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழ்நாட்டில் எடுக்கப்படவேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஊரடங்கினை பொதுமக்கள் ஒத்துழைப்போடு எப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பது குறித்தும், உள்துறை அமைச்சகம் சார்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள தொழில் களை மீண்டும் தொடங்குவதற்கான வழிமுறைகளை எப்படி சாதகமாக பயன்படுத்தவேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் எம். சாய்குமார், எஸ்.விஜயகுமார், பி.செந்தில்குமார், ஜெயஸ்ரீ முரளதரன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×