search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின், ஈஸ்டர் தின வாழ்த்து

    கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த நாளான “ஈஸ்டர் திருநாளை” மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கருணையின் அடையாளமாகவும், மனித சமுதாயம் போற்றும் மாசற்ற புனிதராகவும் திகழும் இயேசு பெருமானின் “ஈஸ்டர் திருநாள்” மனித நேயமிக்க கிறிஸ்தவப் பெருமக்கள் மகிழ்வுறும் இனிய நாள்.

    கிறிஸ்தவ மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் வரலாற்றுப் பாரம்பரியமிக்க பேரியக்கம் தி.மு.க. தான்.

    நம் தாய்த் தமிழ் மண்ணில் காலடி எடுத்து வைத்த அயல்நாட்டுக் குருமார்களாகிய மாமேதைகள் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோருக்கு சீர்மிகு சென்னை மெரினா கடற்கரையில் சிலைகளை அமைத்து, அந்த அரும்பெரும் அறிஞர்களின் தமிழ்ப் பணிச் சிறப்பினை இளைய தலைமுறையினரின் இதயங்களில் ஏற்றி வைத்து அழகு பார்த்தவர் பேரறிஞர் அண்ணா.

    கிறிஸ்தவ சமுதாயத்தின் சமூக, கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்காக முன்னணித் திட்டங்களை நிறைவேற்றி அவர்கள் தம் வாழ்வில் தலை நிமிர்ந்து நடக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தவர் கருணாநிதி.

    “ஈஸ்டர் திருநாள்” கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டிய இந்த நாளில் நாம் எதிர்பாராத விதமாக “சுகாதாரப் பேரிடரை” சந்தித்து சோதனைகளின் விளிம்பில் நிற்கிறோம். ஆனாலும், எத்தகைய துயரங்களையும் தாங்கும் இதயம் கொண்ட இயேசு பெருமானின் மனோதைரியத்துடன் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் “சுய சுகாதார பாதுகாப்புடனும்” மகிழ்ச்சியுடனும் “ஈஸ்டர் திருநாளை” கொண்டாடிட வேண்டும் என்று மீண்டும் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×