search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தலைமறைவான நிதின்‌ஷர்மா
    X
    தலைமறைவான நிதின்‌ஷர்மா

    கொரோனா பாதித்த டெல்லி வாலிபரை பிடிக்க 8 தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை

    விழுப்புரம் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய கொரோனா பாதித்த டெல்லி வாலிபரை பிடிக்க 8 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரம்:

    டெல்லி படேல்நகரை சேர்ந்தவர் நிதின்‌ஷர்மா (வயது 30). சமையல் கலை படிப்பு முடித்த இவர் வேலை தேடி கடந்த டிசம்பர் 10-ந் தேதி புதுவை வந்தார். கடந்த மார்ச் மாதம் வாகன விபத்தில் கைது செய்யப்பட்ட நிதின் ‌ஷர்மா சிறையில் இருந்து விடுதலையானார்.

    அதன் பின்னர் 21-ந்தேதியில் இருந்து சில நாட்கள் புதுவையில் சுற்றி திரிந்த அவர் விழுப்புரம் சென்றார். அங்கு பஸ் நிலையத்தில் தங்கி இருந்த அவருக்கு டெல்லி செல்லும் லாரி டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது நிதின் ‌ஷர்மாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை கடந்த 4 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் தாலுகா போலீசார் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா தடுப்பு வார்டில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை அறிக்கை சென்னைக்கு அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா தொற்று இல்லை என்று கூறி நிதின்‌ஷர்மா உள்பட 26 பேரை நேற்று முன்தினம் சுகாதாரத்துறை ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.

    நள்ளிரவில் சென்னையில் இருந்து 26 பேரின் கொரோனா பரிசோதனை அறிக்கை மருத்துவ மனைக்கு வந்தது. அப்போது நிதின் ‌ஷர்மா மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று பாதித்த நிதின் ‌ஷர்மா உள்பட 26 பேரும் அந்த வார்டில் இல்லாததால் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அப்போதுதான் கொரோனா பாதித்ததாக அனுமதிக்கப்பட்ட 26 பேரை தவறுதலாக சுகாதாரத் துறை ஊழியர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து கொரோனா தொற்று பாதித்த நிதின் ‌ஷர்மா உள்பட 4 பேரையும் உடனடியாக கண்டு பிடிக்கும்படி சுகாதாரத்துறையினர் விழுப்புரம் போலீசாரை கேட்டுக் கொண்டனர்.

    உடனே போலீசார் 4 பேரை தீவிரமாக தேடினர். இதில் விழுப்புரத்தை சேர்ந்த 3 பேரை மட்டும் கண்டுபிடித்த போலீசார் சுகாதாரத்துறையினரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.

    டெல்லியில் இருந்து வந்த நிதின் ‌ஷர்மாவை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. தப்பி ஓடிய அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதனை தொடர்ந்து அவரை தேடப்படும் குற்றவாளியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    நிதின் ‌ஷர்மா குறித்து தகவல் தெரிந்தால் 04146-223265 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    நிதின் ‌ஷர்மாவை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது:-

    டெல்லி நபரை பிடிப்பதற்கு மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    நிதின்‌ஷர்மாவை பிடிப்பதற்கு வசதியாக அவரது புகைப்படத்தையும் சுகாதாரத்துறையினர் தந்துள்ளனர். அதனை வைத்து அவரை பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. உள்ளூரில் தேடி வரும் நிலையில் ஏதாவது வாகனம் மூலம் டெல்லிக்கு சென்றாரா? என்பது பற்றியும் விசாரித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×