search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    விலையேற்றத்தை தடுத்து, உரிய நிவாரணம் வழங்கி மக்கள் உயிரைக் காத்திடுக - மு.க.ஸ்டாலின் கோரிக்கை

    அத்தியாவசியப் பொருள்களின் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்து, விலையேற்றத்தையும் பதுக்கலையும் கட்டுப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா நோய்த்தொற்று அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினைப் பின்பற்றி, தமது வாழ்க்கைக்கான அன்றாடத் தேடலைக் கைவிட்டு, பொதுமக்கள் வீடுகளில் முடங்கியிருக்கிறார்கள். இது இன்றைய நெருக்கடியான காலத்தின் இன்றியமையாத் தேவை என்பதை அனைவருமே உணர்ந்து நடந்து வருகிறார்கள்.

    நோய்த்தொற்றிலிருந்து காத்துக்கொள்வது போலவே, உணவு தட்டுப்பாடின்றி காக்க வேண்டியதும் அவசியம். அனைத்து தரப்பு மக்களுக்கும் வழக்கமாக கிடைக்கும் வருமானம் குறைந்துள்ள அல்லது இல்லாத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது; அச்சுறுத்திக்கொண்டே வருகிறது. 

    சிறு வணிகர்கள், காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை மொத்தமாக  வாங்கி விற்பனை செய்வோர் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த விலையேற்றத்தினால் போதுமான அளவில் கொள்முதல் செய்ய முடியவில்லை. 

    அத்தியாவசியப் பொருள்களின் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்து, விலையேற்றத்தையும் பதுக்கலையும் கட்டுப்படுத்த வேண்டும். தமிழக அரசு அறிவித்த குடும்ப அட்டைகளுக்கான 1000 ரூபாய் நிவாரணம் என்பது, 21 நாட்கள் ஊரடங்கு காலத்திற்கு போதுமானதாக இல்லை. 

    கொரோனா குறித்த விரைவு பரிசோதனைகளை அதிகப்படுத்தும் நடைமுறைகள் பற்றி அரசுகள் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். 

    நோய்த்தொற்று அபாயத்தில் இருந்து மக்களை காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்  விரைந்து மேற்கொள்ள வேண்டும். 

    கொரோனாவைப் போலவே மற்றொரு கொடூரம்தான் பட்டினிச் சாவு. கொரோனாவை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். பட்டினிச் சாவைத் தடுப்பதில் அரசுகளின் பணி அதி முக்கியம். கொரோனாவின் இறுதி விளைவாக, பட்டினிச் சாவுகள் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அலட்சியம் செய்துவிடாமல் சரியாகத் திட்டமிட்டு இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×