search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா உணவகம்
    X
    அம்மா உணவகம்

    கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களிலும் பொதுமக்களுக்கு இலவச உணவு

    கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் ஏப்ரல் 14-ந் தேதி வரை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் எனவும் அதற்கான செலவை அ.தி.மு.க. ஏற்கும் எனவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கூலித்தொழிலாளர்கள் உணவின்றி தவிக்க கூடாது என்பதற்காக 2 வேளை மட்டும் உணவு வழங்கப்பட்டு வந்த அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனையடுத்து இட்லி, ரவை, கோதுமை, உப்புமா கிச்சடி, கலவை சாதங்கள் என விதவிதமாக உணவு வகைகள் சூடாகவும் சுகாதாரமான முறையிலும் மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    ஊரடங்கு காரணமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    அதேநேரம் வழக்கமாக வழங்கப்படும் உணவின் அளவை அதிகரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் 12 அம்மா உணவகங்கள், நகராட்சி பகுதிகளில் 3 அம்மா உணவகங்கள் என மொத்தம் 15 அம்மா உணவகங்கள் உள்ளன. இவற்றில் ஊரடங்கு காலத்தில் மொத்தம் 54 ஆயிரத்து 341 பேர் உணவு உண்டு பயனடைந்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களில் இன்று(நேற்று) முதல் 14-ந்தேதி வரை பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். இதற்கு ஆகும் மொத்த செலவையும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் எஸ்.பி.வேலு மணி அறிவிப்பை தொடர்ந்து இன்று காலை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×