search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு தீவிர சிகிச்சை

    குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் நடக்க முடியாமல் சிரமப்பட்ட மூதாட்டி சிறப்பு வசதியுடன் கூடிய வார்டுக்கு மாற்றப்பட்டார்.
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 6 பேர் இறந்துள்ளனர். 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பணியில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

    இருப்பினும் சென்னை விமான நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வரும் மணிக்கட்டி பொட்டல் அருகில் உள்ள அனந்தசாமிபுரத்தை சேர்ந்தவருக்கும், டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பிய நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேருக்கும் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டென்னிசன் தெருவை சேர்ந்தவர் மூலம் அவருடைய 88 வயது மூதாட்டியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. அவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி கூடுதல் கட்டிடத்தில் கொரோனா தொற்றுள்ளவர்களுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 6 பேருக்கும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களது உடல் நிலையை இந்த பிரிவில் உள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அடிக்கடி கண்காணித்து வருகிறார்கள். 6 பேரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் 88 வயது மூதாட்டிக்கு அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த வார்டில் கழிப்பறைக்கு நடந்து சென்று வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் குழுவினர், மூதாட்டி சிரமப்படுவதை அறிந்து அவருக்கு உதவ முன்வந்தனர். அதன்படி கருணை உள்ளத்தோடு அவர் சிகிச்சை பெற்றுவரும் கூடுதல் கட்டிடத்தில் இருந்து முதியோர்கள் வார்டுக்கு மாற்றினர். அங்கு போதிய வசதி அவருக்கு உள்ளது.

    நேற்றும் சிலர் கொரோனா அறிகுறி சந்தேகங்களுடன் தொற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுடைய ரத்தம் மற்றும் சளி பரிசோதனைக்காக நெல்லையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளைச் சுற்றிலும் உள்ள 5 ஆயிரம் வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 5 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 165 பேருக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தினமும் காய்ச்சல், சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களில் இதுவரை யாருக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×