search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
    X
    சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

    தமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு

    தமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்) தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். 

    தமிழகத்தில் இருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றது உறுதியானது. அவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தனர். அப்போது அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா இருந்தது தெரியவந்தது. இதனால் மார்ச் 31-ந்தேதியில் இருந்து தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. மார்ச் 31-ந்தேதி 57 பேருக்கும், ஏப்ரல் 1-ந்தேதி 110 பேருக்கும், 02-ந்தேதி 75 பேருக்கும், 03-ந்தேதி 81 பேருக்கும், 04-ந்தேதி 74 பேருக்கும், நேற்று 86 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்ததுள்ளது.

    இந்நிலையில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது. இன்று கண்டறியப்பட்ட 50 பேர்களில் 48 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

    மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×