search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் தற்காலிக காய்கறி சந்தையில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கப்பாதையை படத்தில் காணலாம்
    X
    சேலத்தில் தற்காலிக காய்கறி சந்தையில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கப்பாதையை படத்தில் காணலாம்

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - சேலத்தில் 3 இடங்களில் கிருமி நாசினி சுரங்கப்பாதை

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சேலத்தில் 3 இடங்களில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
    சேலம்:

    கொரோனா வைரசை கட்டுப்படுத்த சேலம் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சூரமங்கலம் உழவர் சந்தை, பால்மார்க்கெட் காய்கறி சந்தை ஆகியவை தற்காலிகமாக சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் கைகளை நன்றாக கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதிய பஸ் நிலையம் நுழைவு வாயிலில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 16 அடி நீளம், 10 அடி உயரம், 6 அடி அகலம் கொண்ட சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக தான் பொதுமக்கள் காய்கறி வாங்க செல்ல வேண்டும். அப்போது, அவர்கள் மீது கிருமி நாசினி தண்ணீர் ஸ்பிரே மூலம் தெளிக்கப்படுகிறது. உள்ளே யாரும் இல்லை என்றால் தானாகவே நின்றுவிடும் வகையில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிருமி நாசினி சுரங்கப்பாதையை நேற்று மாவட்ட கலெக்டர் ராமன், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் கிருமி நாசினி சுரங்கப்பாதை வழியாக வந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக உழவர் சந்தையில் கிருமி நாசினி சுரங்க பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பழைய பஸ் நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி வளாகம் என மொத்தம் சேலத்தில் 3 இடங்களில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.நிகழ்ச்சியில், மாநகராட்சி பொறியாளர் அசோகன், ஏ.வி.ஆர்.நிறுவனத்தின் தலைவர் ஏ.பி.எஸ். சஞ்சய், உதவி பொறியாளர் பாலசுப்ரமணியன், சுகாதார ஆய்வாளர் சதீஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×