search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனையில் மருத்துவர்கள் - கோப்புப்படம்
    X
    கொரோனா பரிசோதனையில் மருத்துவர்கள் - கோப்புப்படம்

    விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை: கோடம்பாக்கம் டாக்டருக்கு கொரோனா - 35 பேர் தீவிர கண்காணிப்பு

    கொரோனா வைரஸ் பரிசோதனையில் ஈடுபட்டு வந்த கோடம்பாக்கம் சுப்புராயன் நகர் பகுதியை சேர்ந்த டாக்டருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரிசோதனையில் ஈடுபட்டு வரும் டாக்டர்களும் கண்காணிப்பில் உள்ளனர்.

    இந்த நிலையில் கோடம்பாக்கம் சுப்புராயன் நகர் பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று மதியம் உறுதியாகி உள்ளது.

    கொரோனா வைரஸ் தொடர்பான பரபரப்பு தமிழகத்தில் கடந்த மாதம் முதலே தீவிரமாக ஏற்படத் தொடங்கியது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணித்தனர். இதில் ஏராளமான டாக்டர்கள் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வகையில் கடந்த மாதம் 16-ந் தேதி வரையில் சென்னை விமான நிலையத்தில் கோடம்பாக்கம் டாக்டர் பணியில் இருந்துள்ளார்.

    அப்போது அவர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வந்த பயணிகளுக்கு கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.

    கடந்த மாதம் 16-ந் தேதிக்கு பிறகு இவருக்கு பணி மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்கு மாம்பலத்தில் செயல்பட்டு வரும் பொது சுகாதார மையத்தில் பணிபுரிந்து வந்தார்.அப்பகுதியை சேர்ந்த பலருக்கு சிகிச்சையும் அளித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இரவு கோடம்பாக்கம் டாக்டருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

    இதையடுத்து அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு நேற்று தெரியவந்தது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவருடன் வீட்டில் தாய்-தந்தையும், பாட்டி ஒருவரும் வசித்து வந்துள்ளனர். கடந்த 14-ந் தேதி முதல் 26 பேர் டாக்டரிடம் சிகிச்சை பெற்றும் சென்றுள்ளனர்.

    வெளியாட்கள் 5 பேரும் அவருடன் தொடர்பில் இருந்துள்ளனர். இது தொடர்பாக மொத்தம் 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரையும் தமிழக சுகாதாரத்துறையினர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

    35 பேரையும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வந்துள்ளனர். ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு 35 பேரையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    விமான நிலையத்தில் பணியில் இருந்த சென்னை டாக்டருக்கு வெளிநாட்டினர் மூலமாக கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது.

    இது மற்ற டாக்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் கோடம்பாக்கம் சுப்புராயன் நகர் மற்றும் மேற்கு மாம்பலம் பகுதி மக்கள் மத்தியில் கொரோனா பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×