search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவோணம் அருகே சாராயம் காய்ச்சி மோட்டார் சைக்கிளில் கடத்தியவர் கைது

    திருவோணம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் காய்ச்சி மோட்டார் சைக்கிளில் கடத்திய நபரை கைது செய்தனர்.

    திருவோணம்:

    கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மது பிரியர்கள் சிலர் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு வாங்கி அருந்துகின்றனர்.

    பலர் மதுபாட்டில் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். இந்தநிலையில் திருவோணத்தை அடுத்துள்ள மேனட்ராயன்விடுதி பகுதியில் சாராயம் காய்ச்சி வெளியூருக்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ஒரத்தநாடு போலீஸ் துணை சூப்பிரண்டு கமலக்கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமித்ரா ஆகியோரது மேற்பார்வையில் திருவோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கிய சாமி டேவிட் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காடுவெட்டிவிடுதி சாலையில் வாலிபர் ஒருவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சாராயம் கடத்தி வந்தவர் மேனட்ராயன்விடுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 39) என்பதும், அவர் வீட்டின் அருகே ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி அதனை வெளியூருக்கு விற்பனைக்காக கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து லட்சுமணனை போலீசார் கைது செய்து அவர் கடத்திச் சென்ற 10 லிட்டர் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது வீட்டின் அருகே போடப்பட்டிருந்து 50 லிட்டர் சாராய ஊறலையும் அழித்தனர்.

    Next Story
    ×