search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாயம்,  பல்லாங்குழி விளையாடும் சிறுவர்-சிறுமியர்
    X
    தாயம், பல்லாங்குழி விளையாடும் சிறுவர்-சிறுமியர்

    செல்போன் ஆதிக்கத்தில் இருந்து பாரம்பரிய விளையாட்டுக்கு திரும்பிய சிறுவர்-சிறுமிகள்

    ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் முடங்கியுள்ள சிறுவர்-சிறுமிகள், செல்போன் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.
    தேனி:

    ‘ஓடி விளையாடு பாப்பா’ என்றார் பாரதியார். ஆனால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக சிறுவர்-சிறுமிகள் வீதிகளில் சென்று கூட விளையாட முடியவில்லை. வீடுகளிலேயே அவர்கள் முடங்கிக்கிடக்கின்றனர். இந்த நூற்றாண்டு குழந்தைகளுக்கு செல்போன் பெரிய ஆபத்தாக திகழ்கிறது. வீட்டில் இருக்கும் போது பெரும்பாலான நேரத்தை செல்போனில் செலவு செய்வதாக பெற்றோர்கள் கவலை அடைந்து வந்தனர். தற்போது வீடுகளில் அடைபட்டு கிடக்கும் சிறுவர், சிறுமிகளிடம் பெரும்பாலும் செல்போனை கொடுக்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் சிறுவர்-சிறுமிகள் வீட்டுக்குள் இருந்தே விளையாடியும், தொலைக் காட்சிகளை பார்த்தும் பொழுதுபோக்கி வருகின்றனர். குழந்தைகளுக்கு அறிமுகம் இல்லாமல் இருந்த தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பல்வேறு வீடுகளில் மீண்டும் கற்பிக்கப்படுகிறது. தேனி, கொடுவிலார்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகளில் குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டை நோக்கி திரும்பி உள்ளனர்.

    அதன்படி, பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல், பரமபதம் போன்ற விளையாட்டுகளில் வீடுகளில் இருந்தபடியே விளையாடி மகிழ்கின்றனர். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு இந்த விளையாட்டுகளை சொல்லி கொடுப்பதுடன், அவர்களும் சேர்ந்து விளையாடி பொழுதுபோக்கி வருகின்றனர். இதுபோன்ற பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடுவதன் மூலம் குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு குறைந்துள்ளதாகவும், தொலைக்காட்சியை பார்க் கும் நேரம் குறைந்துள்ளதாகவும் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
    Next Story
    ×