search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள காற்று மாசு அளவிடும் கருவி
    X
    கோவை குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள காற்று மாசு அளவிடும் கருவி

    தொழிற்சாலைகள், வாகனங்கள் இயங்காததால் கோவையில் காற்று மாசுபடுதல் 80 சதவீதம் குறைந்தது

    ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிற்சாலைகள், வாகனங்கள் இயங்காததால் கோவையில் காற்று மாசுபடுதல் 80 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
    கோவை:

    கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த 23-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள், ரெயில்கள் எதுவும் ஓடவில்லை. தொழிற்சாலைகள் இயங்கவில்லை. சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. எப்போதாவது ஒரு வாகனம் சாலையில் செல்வதை காண முடிகிறது. காற்று மாசுபடுவதில் வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த 10 நாட்களாக வாகனங்கள் ஓடாததாலும், தொழிற்சாலைகள் இயங்காததாலும் கோவையில் காற்று மாசுபடுதல் வெகுவாக குறைந்துள்ளது. கோவை சிட்கோ தொழிற்பேட்டை, கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய 3 இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்றில் உள்ள மாசு அளவிடும் கருவிகளை அமைத்துள்ளது. இதில் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள கருவி 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இதில் காற்றில் கலந்துள்ள மாசு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

    காற்றில் பல்வேறு துகள்கள் காணப்படுகின்றன. அவை வாகனங்கள் வெளிவிடும் புகை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களின் துகள்களாக உருவாகின்றன. ஒவ்வொரு துகளும் மைக்ரான் என்ற அளவில் கணக்கிடப்படுகின்றன. ஒரு மைக்ரான் என்பது .001 மி.மீட்டர். அதாவது ஒரு மி.மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

    அதன்படி நாம் சுவாசிக்கும் காற்றில் 2½ மைக்ரான் அளவுள்ள துகள்கள் தான் நுரையீரல் வரை செல்கின்றன. அதை விட பெரிய துகள் அதாவது 10 மைக்ரான் அளவுள்ள துகள்கள் பூமியின் மேற்பகுதியில் ஏதாவது ஒரு பகுதியில் படிந்து விடுகிறது. இவை நாம் சுவாசிக்கும் போது நுரையீரலுக்குள் செல்வதில்லை. இதுதவிர வாகனங்களின் புகையில் கலந்துள்ள கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக டை ஆக்சைடு மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவையும் காற்றில் கலக்கின்றன.

    கோவையில் உள்ள கருவியின் அளவீடுகளின்படி மார்ச் மாதம் 23-ந் தேதிக்கு பிறகு காற்று மாசுபடுவது படிப்படியாக குறைந்து கொண்டே வந்துள்ளது. அதன்படி கடந்த 27-ந் தேதி எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி காற்று மாசுபடுவது கிட்டத்தட்ட 80 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக சுற்றுசூழல் துறை பேராசிரியர் டாக்டர் ஏ.மணிமேகலன் கூறியதாவது:-

    காற்றில் 2 விதமான துகள்கள் பரவுகின்றன. ஒருவித துகள் நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்து நுரையீரல் வரை செல்லக்கூடியது. அதை ஆர்.எஸ்.பி.எம். (ரெஸ்பிரேட்டரி பார்ட்டிகிள் மேட்டர்) என்று அழைக்கப்படுகிறது.

    மற்றொரு துகள் எஸ்.பி.எம். (சர்வேஸ் பார்ட்டிகிள் மேட்டர்). இதுவும் காற்றில் கலந்திருக்கும். அது பூமியின் மேற்பகுதியில் படிந்து விடும். இது தவிர காற்றில் கலந்துள்ள கந்தக டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றின் அளவும் வெகுவாக குறைந்துள்ளதால் கோவையில் காற்று மாசுபடுவது கிட்டத்தட்ட 80 சதவீதம் குறைந்து தூய்மையான பிராணவாயு கிடைப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காற்றில் உள்ள தூசியும் குறைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் ஆஸ்துமா, நுரையீரல் தொந்தரவு இருக்காது. இதற்கு முன்பு மாசுபட்ட காற்றை தான் நாம் சுவாசித்து வந்தோம். தற்போது மாசுபடாத சுத்தமான காற்று கிடைக்கிறது.

    தற்போது வாகனங்கள் ஓடாததால் ஒலி மாசும் இல்லை. இதனால் புதிய புதிய பறவைகளை நாம் பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் வாகனங்களின் இரைச்சல் சத்தத்தினால் பறவைகள் வருவதில்லை. தற்போது அந்த சத்தம் இல்லாததால் இதுவரை பார்க்காத பறவைகளை கூட மாநகரில் பார்க்க முடிகிறது. குறிப்பாக நைட் ஜார், போர்க் டெய்ல்ட் ஸ்விப்ட், மரங்கொத்தி, இந்தியன் ரோலர் உள்பட 20-க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து செல்கின்றன. பெரிய கழுகுகள் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் தான் பறக்கும். ஏனென்றால் இதற்கு முன்பு ஒலி மாசு அதிகமாக இருந்ததால் அவை கீழே பறக்காது. ஆனால் அவையும் தற்போது தாழ்வாக பறக்கின்றன.

    பாரதியார் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள சாலைகளில் வாகனங்களின் இயக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது அவற்றின் இயக்கம் இல்லாததால் மான்கள், மயில்கள் சாலைகளில் சாதாரணமாக நடமாடுகின்றன. நீண்ட நேரம் படுத்துக்கிடக்கின்றன. இது இயற்கை நமக்கு கற்று கொடுத்திருக்கிற பாடம் என்றே சொல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×