search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
    X
    ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

    கொரோனா தடுப்பு-நிவாரண பணிகளுக்கு ரூ.1 கோடி வழங்குகிறது அதிமுக

    கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மக்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், நோயுற்றோருக்கு சிகிச்சையும், நிவாரணமும் அளிப்பதற்காகவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இரவு, பகல் பாராமல் சுற்றிச் சுழன்று சிறப்பாக பணியாற்றிவரும் இந்த நேரத்தில், அரசின் கோரிக்கையை முழுமனதோடு ஏற்று, கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இயற்கை பேரிடர் ஏற்பட்ட நேரங்களில் எல்லாம் மக்களின் தேவைகளை அறிந்து கண்ணும், கருத்துமாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், கழக அரசும் கொரோனா நோய் தொற்று பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்றவும், மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளையும், ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில் மக்களுக்கு உரிய பணிகளை ஆற்றவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. பல நிலைகளிலும், வடிவங்களிலும் இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிப்பார்கள் எனவும், கொரோனா நோய் தடுப்பு மற்றும் மருத்துவ வசதிகளை அளிப்பதற்கான சிறப்பு நிதிக்கு, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 1 கோடி ரூபாயையும், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 25 லட்சம் ரூபாயையும் வழங்குவார்கள் எனவும் கழகத்தின் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் தங்களால் இயன்ற உதவிகளையும், நிவாரணப் பணிகளையும் மக்களுக்கு செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×